search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "500 crore relief package"

    சர்க்கரை ஆலைகளுக்கு புத்துயிரூட்ட ரூ. 8,500 கோடியிலான திட்டத்துக்கும், கிராமப்புற அஞ்சல் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கவும் மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.
    புதுடெல்லி:

    சர்க்கரை ஆலைகளுக்கு புத்துயிரூட்ட ரூ. 8,500 கோடியிலான திட்டத்துக்கும், கிராமப்புற அஞ்சல் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கவும் மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.

    நாடு முழுவதும் சர்க்கரை ஆலைகள் நெருக்கடியில் உள்ளன. சர்க்கரைக்கான தேவையை விட உற்பத்தி அளவு அதிகரித்து உள்ளதால், சர்க்கரை ஆலைகள் கிலோவுக்கு ரூ.8 முதல் ரூ.9 வரை இழப்பை சந்திக்கின்றன.

    சர்க்கரை விலையில் ஏற்பட்டு உள்ள சரிவு காரணமாக கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் ரூ.20 ஆயிரம் கோடிக்கு அதிகமாக பாக்கி வைத்து உள்ளன.

    இந்த பிரச்சினைகளில் இருந்து சர்க்கரை ஆலைகள் மீண்டு வருகிற வகையில் சர்க்கரை இறக்குமதி மீதான வரியை 100 சதவீத அளவுக்கு மத்திய அரசு உயர்த்தி உள்ளது. ஏற்றுமதி வரியை ரத்து செய்தது. சர்க்கரை ஆலைகள் 20 லட்சம் டன் சர்க்கரையை ஏற்றுமதி செய்யுமாறு மத்திய அரசு கூறி உள்ளது.

    இந்தநிலையில், சர்க்கரை ஆலைகளுக்கு புத்துயிரூட்டி, மறுவாழ்வு வழங்குகிற வகையில் ரூ.8 ஆயிரத்து 500 கோடி மதிப்பிலான திட்டத்தை மத்திய அரசு தீட்டி உள்ளது.

    இதற்கான ஒப்புதலை பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நேற்று கூடிய மத்திய மந்திரிசபை வழங்கியது. இந்த திட்டத்தின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

    * சர்க்கரை ஆலைகளில் எத்தனால் உற்பத்தி வசதி கட்டமைப்புகளை உருவாக்குவதற்கு குறைந்த வட்டியில் கடன் வழங்க ரூ.4 ஆயிரத்து 500 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

    * சர்க்கரை ஆலைகளில் புதிதாக எத்தனால் உற்பத்தி வசதியை ஏற்படுத்தவும், இருக்கிற வசதியை விரிவுபடுத்தவும் வழங்குகிற கடனுக்கு வட்டி தள்ளுபடி செய்யும் வகைக்கு ரூ.1,300 கோடி ஒதுக்கப்படுகிறது.

    * கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் வழங்க வேண்டிய பாக்கி தொகையை செலுத்த உதவும் வகையில் ஒரு நடவடிக்கையை மேற்கொள்ளவும் மத்திய மந்திரிசபை தீர்மானித்தது. இதன்படி சர்க்கரை உற்பத்தி அடிப்படையில் விவசாயிகளுக்கு நேரடியாக வழங்குவதற்கு ரூ.1,540 கோடி ஒதுக்கப்படும்.

    * சர்க்கரை கையிருப்பை அதிகளவில் வைத்திருப்பதற்காக ரூ.1,200 கோடி வழங்கப்படும்.

    சர்க்கரையில் இருந்து எடுக்கப்படுகிற எத்தனாலை பெட்ரோலுடன் கலந்து வாகனங்களை இயக்க முடியும். எத்தனால் கலந்தால் பெட்ரோல் விலை குறைய வாய்ப்பு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

    அஞ்சல் துறையில் பணியாற்றி வருகிற ஜி.டி.எஸ். என்று அழைக்கப்படுகிற கிராமப்புற தபால் அலுவலக ஊழியர்களின் சம்பளம், அலவன்சுகள் உயர்த்தப்படுகின்றன. கிராமப்புற தபால் அலுவலக ஊழியர்கள் கிளை அஞ்சல் அதிகாரி, உதவி கிளை அஞ்சல் அதிகாரி என்று இரு பிரிவின்கீழ் கொண்டு வரப்படுவார்கள்.

    இவர்களது சம்பளம், அலவன்ஸ் உயர்த்துவதால் மத்திய அரசுக்கு நடப்பு நிதி ஆண்டில் ரூ.1,257 கோடியே 75 லட்சம் செலவு பிடிக்கும். இதன்மூலம் 3 லட்சத்து 7 ஆயிரம் பேர் பலன் அடைவர்.

    நலிவு அடைந்த, நஷ்டத்தில் இயங்குகிற அரசு நிறுவனங்களை குறித்த காலத்தில் மூடுவதற்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.

    விண்வெளித்துறையில் பி.எஸ்.எல்.வி. ராக்கெட் திட்டங்களை தொடர்வதற்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் வழங்கியது. இதற்கு ரூ.6 ஆயிரத்து 131 கோடி நிதி ஒதுக்கீடு தேவைப்படும்.

    நாடு முழுவதும் சூரிய ஒளி மின்சாரத்தில் இயங்குகிற 3 லட்சம் தெரு விளக்குகளை அமைக்க பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய மந்திரிகள் குழு ஒப்புதல் அளித்தது. 
    ×