search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எடியூரப்பா ராஜினாமா பற்றி ராகுல் பரபரப்பு கருத்து
    X

    எடியூரப்பா ராஜினாமா பற்றி ராகுல் பரபரப்பு கருத்து

    கர்நாடக முதல்-மந்திரி பதவியில் இருந்து எடியூரப்பா ராஜினாமா செய்தது பற்றி ராகுல் காந்தி கருத்து தெரிவிக்கையில், “அதிகாரம், பணம், ஊழல் அல்ல, மக்களின் விருப்பம்தான் நிறைவேறும்” என்று குறிப்பிட்டார். #rahulgandhi #karnatakaassembly
    புதுடெல்லி:

    கர்நாடக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தாமலேயே முதல்-மந்திரி எடியூரப்பா நேற்று ராஜினாமா செய்து விட்டார்.
    இதையொட்டி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கருத்து தெரிவிக்கையில், “இந்தியாவில் எல்லாவற்றையும் அதிகாரம் சாதித்து விடாது; பணம் சாதித்து விடாது; ஊழல் சாதித்து விடாது. மக்களின் விருப்பம்தான் நிறைவேறும் என்று பாரதீய ஜனதா கட்சி காட்டி இருக்கிறது என்பதற்காக நான் பெருமைப்படுகிறேன்” என்று குறிப்பிட்டார்.



    கர்நாடக சட்டசபையில், சபை அலுவல்கள் முடிந்தபோது, பதவி விலகிய முதல்-மந்திரி எடியூரப்பா, தற்காலிக சபாநாயகர் போப்பையா உள்ளிட்ட பாரதீய ஜனதா கட்சி எம்.எல்.ஏ.க்கள் தேசிய கீதத்துக்கு மரியாதை தரவில்லை என்று ராகுல் காந்தி சாடினார்.

    இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், “இதற்காகத்தான் நாங்கள் போராடுகிறோம். பாரதீய ஜனதா, ஆர்.எஸ்.எஸ்., பிரதமர் மோடி, பாரதீய ஜனதா தலைவர் அமித் ஷா ஆகியோருக்கு நாட்டின் எந்த ஒரு அமைப்பின் மீதும் மரியாதை கிடையாது. இதேபோன்றுதான் காவிக்கட்சி கர்நாடகம், கோவா, மணிப்பூர், மேகாலயா மாநிலங்களில் அவர்கள் மக்கள் தீர்ப்பை மதிக்கவில்லை” என்று கூறினார்.

    தொடர்ந்து அவர் கூறியதாவது:-

    கர்நாடக கவர்னர் வஜூபாய் வாலா பதவி விலக வேண்டும். அதுதான் நல்லது.

    கர்நாடகத்தில் ஆட்சியை தக்கவைப்பதற்கு எம்.எல்.ஏ.க்களை வாங்குவதற்கு பிரதமர் மோடி அங்கீகாரம் வழங்கி இருக்கிறார். ஊழலை எதிர்த்து போரிடுவதாக சொல்கிற அவர், ஊழல்வாதியாக இருக்கிறார்.

    இந்தியாவை விட, சுப்ரீம் கோர்ட்டை விட மோடி பெரியவர் அல்ல. கர்நாடகத்தில் நடந்த நிகழ்வு மூலம், பாரதீய ஜனதா கட்சியும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் பாடம் கற்றுக்கொள்வார்கள் என்று நம்புவோம்.

    பாரதீய ஜனதா கட்சியை வீழ்த்துவதற்காக மற்ற எதிர்க்கட்சிகளுடன் நாங்கள் இணைந்து செயல்படுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #rahulgandhi #karnatakaassembly
    Next Story
    ×