செய்திகள்

மராட்டிய முதல்வர் தேவேந்திர பட்னாவிசை தாக்க முயன்ற வாலிபர் கைது

Published On 2017-11-04 09:29 GMT   |   Update On 2017-11-04 09:29 GMT
மராட்டிய மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மீது மைவீசி தாக்க முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மும்பை:

மராட்டிய மாநிலத்தின் அகமத்நகர் மாவட்டத்தில் உள்ள ராலேகான் சித்தி பகுதியில் உள்ளூர் மக்கள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு விழாவில் அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கலந்துகொண்டார்.

இந்த நிகழ்ச்சியையொட்டி அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்த நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவும் கலந்துகொண்டார். பட்னாவிஸ் உரையாற்றும் போது கூட்டத்தில் இருந்த ஒரு வாலிபர் அவருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார். இதனால் அப்பகுதியில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

அந்த வாலிபர் கோஷங்கள் எழுப்பிக்கொண்டே விழா மேடையை நெருங்க முயன்றார். இதையடுத்து அந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. பட்னாவிஸ் உடனடியாக அப்பகுதியில் இருந்து கிளம்பினார்.

கைது செய்யப்பட்ட அந்த வாலிபர் கையில் ஒரு நீல மை பாட்டில் வைத்திருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் அந்த வாலிபர் முதல்வர் மீது அந்த மை பாட்டிலை வீச திட்டமிட்டிருக்கலாம் எனவும் போலீசார் கூறியுள்ளனர். இந்த சம்பவத்தையடுத்து அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
Tags:    

Similar News