செய்திகள்

காஷ்மீர் எல்லைப்பகுதியில் துப்பாக்கிச் சூடு: இந்திய வீரர் பலி

Published On 2017-10-03 12:05 GMT   |   Update On 2017-10-03 12:05 GMT
ஜம்மு-காஷ்மீர் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் படையினர் இன்று பிற்பகல் அத்துமீறி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்திய ராணுவத்தை சேர்ந்தவர் வீரமரணம் அடைந்தார்.
ஸ்ரீநகர்:

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய வகையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள எல்லைக்கோட்டுப் பகுதிகளில் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

அவ்வகையில், கடந்த ஆண்டில் 228 முறை இதைப்போன்ற தாக்குதல்களை பாகிஸ்தான் படையினர் நடத்தியுள்ளனர். இந்த ஆண்டில் அவர்களின் அத்துமீறல் மேலும் அதிகரித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் தேதிவரை 285 முறை தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் ராணுவம், இந்த மாதத்திலும் தாக்குதல்களை தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில், பூஞ்ச் மாவட்டம் பலகோட் அருகேயுள்ள பிம்பர்காலி எல்லைக்கோட்டுப் பகுதியில் உள்ள கிருஷ்னா காட்டி செக்டர் பகுதியில் இன்று பிற்பகல் ஒரு மணியளவில் பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய நிலைகளை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். கையெறி குண்டுகளையும் வீசினர்.

இந்திய வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தினர். சுமார் அரை மணி நேரம் நீடித்த இந்த துப்பாக்கிச் சண்டையில் இந்திய ராணுவத்தை சேர்ந்த ‘நாயக்’ மகேந்திரா செம்ஜங்(35) என்பவர் வீர மரணம் அடைந்தார்.
Tags:    

Similar News