செய்திகள்

ராகுல் காந்தி அமெரிக்காவில் 2 வார சுற்றுப்பயணம்

Published On 2017-09-11 01:45 GMT   |   Update On 2017-09-11 01:45 GMT
ராகுல் காந்தி அமெரிக்காவில் 2 வார கால சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். பண்டிட் ஜவகர்லால் நேரு பேசிய கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் அவர் உரை ஆற்றுகிறார்.
புதுடெல்லி:

காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி 2 வார காலம் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தின்போது அவர் நாளை (12-ந் தேதி), பெர்க்லி நகரில் உள்ள பிரசித்தி பெற்ற கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் ‘70-ல் இந்தியா’ என்ற தலைப்பில் (இந்தியா விடுதலை பெற்றதின் 70-வது ஆண்டையொட்டி) அவர் உரை ஆற்றுகிறார்.

இதே பல்கலைக்கழகத்தில் நாட்டின் முதல் பிரதமரும், ராகுல் காந்தியின் கொள்ளு தாத்தாவுமான பண்டிட் ஜவகர்லால் நேரு 1949-ம் ஆண்டு உரை ஆற்றி உள்ளார் என்பது நினைவுகூரத்தக்கது.

இங்கு ராகுல் காந்தி உரையாற்றப்போவது குறித்து கட்சி வட்டாரங்கள் கூறும்போது, “உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் சம கால பிரதிபலிப்புகளையும், முன்னேற்றத்தின் பாதையையும் ராகுல் காந்தி வெளிப்படுத்துவார். அவரது கொள்ளு தாத்தா பண்டிட் ஜவகர்லால் நேருவின் அடிச்சுவடுகளை அவர் பின்பற்றுவார்” என்றன.

பெர்க்லி பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் உரையாற்றுவதை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளதாக ராகுல் காந்தி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி குடும்பத்துடன் நீண்டகாலமாக தொடர்பு கொண்டுள்ள சாம் பிட்ரோடா, ராகுலின் அமெரிக்க பயணம் பற்றி டுவிட்டரில் வெளியிட்டுள்ள தகவலில், “நியூயார்க் நகரில் அமெரிக்க வாழ் காங்கிரஸ் கட்சியினர் நடத்துகிற மிகப்பெரிய நிகழ்ச்சியில் ராகுல் காந்தி கலந்து கொள்கிறார்” என்று தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி, அமெரிக்காவை ஆளும் குடியரசு கட்சி பிரதிநிதிகளையும் சந்திப்பார் என அவர் கூறி உள்ளார்.

வாஷிங்டன் நகருக்கு செல்லும் ராகுல் காந்தி அங்கு சிந்தனையாளர் சமூகத்தினரிடையே பேசுகிறார். இதற்கான ஏற்பாடுகளை அமெரிக்க முன்னேற்றத்துக்கான அமைப்பு செய்துள்ளது.

ராகுல் காந்தி, நியூ ஜெர்சி மாகாணத்தில் உள்ள பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்திலும் உரையாற்ற உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
Tags:    

Similar News