செய்திகள்

குருகிராம் பள்ளி மாணவன் கொலை: குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க பீகார் முதல்வர் வலியுறுத்தல்

Published On 2017-09-10 22:20 GMT   |   Update On 2017-09-10 22:20 GMT
குருகிராம் பள்ளி மாணவனை கொலை செய்த குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பீகார் முதல்வர் நிதிஷ்குமார் வலியுறுத்தி உள்ளார்.
புதுடெல்லி:

குருகிராம் பள்ளி மாணவனை கொலை செய்த குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பீகார் முதல்வர் நிதிஷ்குமார் வலியுறுத்தி உள்ளார்.

டெல்லியின் தென்மேற்கு பகுதியில் உள்ள குருகிராமில் தனியார் பள்ளி ஒன்றில் 2-ம் வகுப்பு படித்து வந்த 7 வயது மாணவன் ஒருவன், பள்ளி கழிவறையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தான். விசாரணையில், அந்த சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்து கொலை செய்த பள்ளி பேருந்தின் நடத்துனர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதற்கிடையே, மாணவன் கொலை வழக்கில் சி.பி.ஐ. விசாரணை செய்து உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க வேண்டும் என மாணவனின் பெற்றோர், உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது போலீசார் நடத்திய தாக்குதலில் செய்தியாளர் ஒருவர் படுகாயம் அடைந்தார். செய்தி நிறுவனத்தின் வாகன கண்ணாடிகளை போலீசார் அடித்து நொறுக்கினர். இந்த தாக்குதலுக்கு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், மாணவனின் கொலைக்கு காரணமான குற்றவாளி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரியானா முதல்வர் கட்டாரிடம் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் வலியுறுத்தி உள்ளார்.

இதுதொடர்பாக நிதிஷ்குமார் கூறுகையில், கொலை செய்யப்பட்ட மாணவனின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். விரைவில் உண்மையான கொலை குற்றவாளியை கண்டறிந்து அவன்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரியானா முதல்வரிடம் வலியுறுத்தி உள்ளேன் என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News