செய்திகள்

யமுனை நதியில் மாசு விவகாரம்: மத்திய, டெல்லி மாநில அரசுக்கு தலா ரூ.50 ஆயிரம் அபராதம்

Published On 2017-08-24 00:30 GMT   |   Update On 2017-08-24 00:30 GMT
யமுனை நதியில் மாசு கலப்பது தொடர்பாக எந்த அறிக்கையும் தாக்கல் செய்யாத காரணத்திற்காக மத்திய, டெல்லி மாநில அரசுக்கு தலா ரூ.50 ஆயிரம் அபராதம் வழங்கி தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி:

யமுனை நதியில் தொழிற்சாலைகள் கழிவு நீரை கலப்பது, குப்பை கொட்டுவதை தடுப்பது தொடர்பாக டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணை கடந்த 8-ந்தேதி நடந்தபோது, யமுனை நதி 67 சதவீதம் மாசு அடைந்திருப்பதாக கவலை தெரிவித்த பசுமை தீர்ப்பாயத்தின் தலைவரும், நீதிபதியுமான ஸ்வதந்தர் குமார் யமுனை நதியை பாதுகாப்பது குறித்த ஆய்வறிக்கையை தாக்கல் செய்யும்படி மத்திய அரசு, டெல்லி மாநிலம், அரியானா, உத்தரபிரதேசம், இமாசல பிரதேச அரசுகளுக்கு உத்தரவிட்டு இருந்தார்.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகமும், டெல்லி மாநில அரசும் எந்த அறிக்கையையும் தாக்கல் செய்யவில்லை.

இதனால் அதிருப்தி அடைந்த நீதிபதி ஸ்வதந்தர் குமார், “பசுமை தீர்ப்பாயம் கடந்த 8-ந்தேதி பிறப்பித்த உத்தரவு கடுமையானது. அப்படி இருந்தும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகமும், டெல்லி மாநில அரசும் எந்த அறிக்கையையும் தாக்கல் செய்யவில்லை. எனவே இரு தரப்பினருக்கும் தலா ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது” என்று கூறி வழக்கு விசாரணை வருகிற 29-ந்தேதிக்கு ஒத்தி வைத்தார். 
Tags:    

Similar News