செய்திகள்

”இப்போதும் நிதிஷ்குமார் வெற்றியை பாகிஸ்தான் கொண்டாடுகிறதா?” - அமித்ஷாவை சீண்டும் சிவசேனா

Published On 2017-07-28 10:24 GMT   |   Update On 2017-07-28 10:24 GMT
பீகாரில் நிதிஷ்குமார் ஆட்சியமைக்க பா.ஜ.க ஆதரவளித்துள்ள நிலையில், அக்கட்சியை சிவசேனா கடுமையாக விமர்சித்து தனது அதிகாரப்பூர்வ பத்திரிக்கையில் கருத்து தெரிவித்துள்ளது.
மும்பை:

பீகார் மாநிலத்தில் லல்லு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனாதா தளம் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சியைப்பிடித்த நிதிஷ்குமார்,  நேற்று முன் தினம் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார். பின்னர், பா.ஜ.க ஆதரவுடன் நேற்று மீண்டும் முதல்வராக பதவியேற்றார். அம்மாநில பா.ஜ.க தலைவர் சுஷில் குமார் மோடி துணை முதல்வராகவும் பதவியேற்றார்.

கடந்த 2014-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் பா.ஜ.க பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்டதை எதிர்த்து, நிதிஷ்குமார் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறினார். தற்போது, மீண்டும் இந்த கூட்டணியில் அவர் இணைந்திருப்பது தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநில சட்டசபை தேர்தலில் லல்லு பிரசாத் யாதவ் உடன் கூட்டணி அமைத்து நிதிஷ் வெற்றி பெற்றதும், “நிதிஷ்குமாரின் வெற்றியை பாகிஸ்தானில் கொண்டாடுகின்றனர்” என பா.ஜ.க தலைவர் அமித்ஷா விமர்சித்திருந்தார். இப்போது, பா.ஜ.க ஆதரவுடன் நிதிஷ் மீண்டும் ஆட்சியமைத்துள்ளதால், “இப்போதும் நிதிஷ்குமார் வெற்றியை பாகிஸ்தான் கொண்டாடுகிறதா?” என அமித்ஷாவுக்கு சிவசேனா கட்சி கேள்வியெழுப்பியுள்ளது.

தனது கட்சிப்பத்திரிக்கையில் இவ்விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள சிவசேனா, ”அரசியலில் கொள்கைகளுக்கும், கோட்பாடுகளுக்கும் நீண்ட காலம் இருப்பதில்லை. நிதிஷ்குமார் ஆட்சியமைக்க பா.ஜ.க உதவியுள்ள சம்பவம் பாகிஸ்தானை மகிழ்விக்குமா?”என கூறியுள்ளது. 

மராட்டியம் மாநிலத்தில் பா.ஜ.க - சிவசேனா கூட்டணி ஆட்சி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News