செய்திகள்

மக்களவையில் அமளியில் ஈடுபட்ட 6 காங். எம்பிக்கள் சஸ்பெண்ட்: சபாநாயகர் அதிரடி உத்தரவு

Published On 2017-07-24 09:32 GMT   |   Update On 2017-07-24 09:32 GMT
பாராளுமன்றத்தின் மக்களவையில் பேப்பர்களை தூக்கி எறிந்து அமளியில் ஈடுபட்ட 6 காங்கிரஸ் எம்.பி.க்களை 5 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார்.
புதுடெல்லி:

பாராளுமன்றத்தின் மக்களவை இன்று காலை கூடியது. சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அவையை தொடங்கி வைத்தார். அவை தொடங்கிய சிறிது நேரத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், தங்களை பேச அனுமதிக்க வேண்டும் என கோரினர். அதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்தார்.

அப்போது, பா.ஜ.க. உறுப்பினர் மீனாட்சி லேகி எழுந்து நின்று, போபர்ஸ் விவகாரம் குறித்து மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என கோரினார்.



அவரது கோரிக்கைக்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். போபர்ஸ் விவகாரம் குறித்து பேச சபாநாயகர் அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். மேலும், சபாநாயகர் சுமித்ரா மகாஜன் மீது பேப்பர்களை கிழித்து எறிந்து அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து, அவையை மதியம் 2 மணி வரை ஒத்திவைத்தார்.

இந்நிலையில், மக்களவை மீண்டும் மதியம் கூடியது. அப்போது சபாநாயகர் சுமித்ரா மகாஜன், அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்பிக்கள் பெயர்களை வாசித்தார். கவுரவ் கோகாய், கே.சுரேஷ், ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, ரஞ்சித் ரஞ்சன், சுஷ்மிதா தேவ் மற்றும் எம்.கே.ராகவன் உள்ளிட்ட அனைவரும் அடுத்த 5 தினங்களுக்கு அவை நடவடிக்கையில் பங்கேற்க தடை விதித்து உத்தரவிட்டார்.
Tags:    

Similar News