செய்திகள்

மும்பை மார்க்கெட்டில் 700 கிலோ தக்காளி மாயம்: திருடர்களுக்கு போலீசார் வலை

Published On 2017-07-22 15:38 GMT   |   Update On 2017-07-22 15:38 GMT
மராட்டிய மாநிலத்தில் உள்ள தஹிசார் மார்க்கெட்டில் சுமார் 700 கிலோ தக்காளி மாயமானது. தக்காளியை திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
மும்பை:

பொதுமக்களின் அத்தியாவசிய உணவு பொருள்களின் விலை ஏறினால் ஆட்சியாளர்களுக்கு ஆபத்து என்பதை அவர்கள் நன்கு உணர்ந்துள்ளனர். உதாரணமாக, வெங்காயத்தின் விலை தாறுமாறாக ஏறியதால், அது ஆட்சியாளர்களின் கண்களில் கண்ணீர் வரவழைத்ததை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. எனவே தான் ஆட்சியில் இருக்கும் மத்திய அரசு, அத்தியாவசிய பொருள்களின் விலையை கட்டுக்குள் வைத்து வருகின்றன.

இதற்கிடையே, கடந்த சில நாட்களாக தக்காளியின் விலை அதிகரித்து வருகிறது. சில மாநிலங்களில் ஒரு கிலோ தக்காளி 120 ரூபாய் வரை விற்றுள்ளது. மத்திய அரசு தக்காளி விலை குறைவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

மும்பை தஹிசார் பகுதியில் உள்ள மார்க்கெட்டில் கடை வைத்திருப்பவர் சாந்திலால் ஸ்ரீவத்சவ். இவர் தினமும் நவிமும்பை மார்க்கெட்டில் இருந்து தக்காளியை மொத்தமாக கொள்முதல் செய்வது வழக்கம்.
 
இந்நிலையில், சாந்திலால் நேற்று முன்தினம் இரவு சுமார் 700 கிலோ அளவுக்கு தக்காளி வாங்கி வந்துள்ளார். எலி சேதப்படுத்தும் என்ற பயத்தில் கடைக்கு வெளியில் தக்காளி கிரேடுகளை இறக்கி வைத்துவிட்டு வந்தார்.

மறுநாள் காலை கடைக்கு சென்று பார்த்த அவர் அதிர்ச்சி அடைந்தார். அவர் முதல் நாள் வைத்திருந்த இடத்தில் தக்காளி இல்லை.

யாரோ அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர், திட்டமிட்டு தக்காளியை மொத்தமாக திருடிச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து சாந்திலால் கொடுத்த புகாரின் பேரில் தஹிசார் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தக்காளியை திருடிய கும்பலை வலைவீசி
தேடி வருகின்றனர்.

மார்க்கெட்டில் சிசிடிவி கேமராக்கள் இல்லாததை தெரிந்து கொண்ட கும்பல் ஒன்று, தக்காளி கிலோ 100 ரூபாயை தாண்டி விற்கும் நிலையில், மார்க்கெட்டில் இருந்து மொத்தமாக தக்காளியை திருடி சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News