செய்திகள்

சிம்லா பேருந்து விபத்து: பலி எண்ணிக்கை 28 ஆக உயர்வு - பிரதமர் மோடி இரங்கல்

Published On 2017-07-20 17:41 GMT   |   Update On 2017-07-20 17:41 GMT
இமாச்சலப்பிரதேசம் மாநிலம் சிம்லாவில் நடந்த பேருந்து விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
சிம்லா:

இமாச்சலப்பிரதேசம் மாநிலம் சிம்லாவில் நடந்த பேருந்து விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இமாசலப்பிரதேசம் மாநிலத்தின் கின்னார் பகுதியில் இருந்து சோலன் பகுதியை நோக்கி இன்று காலை பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. பஸ்சில் 40க்கு மேற்பட்ட பயணிகள் பயணம் செய்து கொண்டிருந்தனர். ராம்பூர் அருகே சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விழுந்தது. இதில் பஸ்சில் பயணம் செய்த 28 பேர் பரிதாபமாக பலியாகினர். 9 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்நிலையில், சிம்லாவில் நடந்த பேருந்து விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘சிம்லாவில் நடைபெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் குணமடைந்து நலம்பெற வேண்டும் என இறைவனை வேண்டிக் கொள்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.

இதேபோல், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் பேருந்து விபத்தில் பலியானவர்களுக்கு டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்தியில், ‘சிம்லாவில் நடந்த பேருந்து விபத்து மிகவும் துயரமானது. விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

Similar News