செய்திகள்

திருவனந்தபுரம் அருகே பாலியல் தொல்லையால் பெண் தற்கொலை முயற்சி: காங்கிரஸ் எம்.எல்.ஏ. மீது வழக்கு

Published On 2017-07-20 06:52 GMT   |   Update On 2017-07-20 06:52 GMT
திருவனந்தபுரம் அருகே பாலியல் தொல்லையால் பெண் ஒருவர் தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் தொடர்பாக காங்கிரஸ் எம்.எல்.ஏ. மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்:

திருவனந்தபுரத்தை அடுத்த பாலராமபுரம் பகுதியில் பெண் ஒருவர் கடை நடத்தி வருகிறார்.

அந்த பெண்ணுக்கு திருமணமாகி கணவரும், குழந்தைகளும் உள்ளனர். நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது வாயில் நுரை தள்ளியபடி மயங்கி கிடந்தார். அவர் அருகே ஏராளமான தூக்க மாத்திரைகளும் கிடந்தன.

இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் அந்த பெண்ணை மீட்டு நெய்யாற்றின்கரையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் பற்றி பாலராமபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் பெண்ணின் கணவர் இதுபற்றி போலீசில் புகார் செய்தார்.

அதில், தன் மனைவியை கோவளம் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. வின்சென்ட் அடிக்கடி டெலிபோனில் பேசி பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். இதுபற்றி ஏற்கனவே போலீசில் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவேதான் அவர், தற்கொலைக்கு முயன்றுள்ளார். உயர் அதிகாரிகள் இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் போலீஸ் உயர் அதிகாரிகளுக்கும் டி.ஜி.பி. லோக்நாத் பெக்ராவுக்கும் தெரிய வந்தது.

இதையடுத்து உயர் அதிகாரிகள் உத்தரவின்பேரில் கோவளம் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. வின்சென்ட் மீது பாலராமபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதுபற்றி எம்.எல்.ஏ. வின்சென்ட்டிடம் நிருபர்கள் கேட்டபோது, அவர் கூறியதாவது:-

இந்த சம்பவம் அடிப்படை ஆதாரமற்றது. பொய்யான புகாரை வேண்டுமென்றே என் மீது கூறி உள்ளனர். இது தொடர்பான விசாரணையை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த சம்பவம் பற்றி கொல்லம் மாநகர போலீஸ் கமி‌ஷனர் அஜிதாபேகம் விசாரணை நடத்துவார் என போலீஸ் டி.ஜி.பி. லோக்நாத் பெக்ரா அறிவித்துள்ளார்.
Tags:    

Similar News