செய்திகள்

பா.ஜ.க.வுக்கு ஆதரவு: நிதிஷ்குமார் ஒரு சந்தர்ப்பவாதி என காங்கிரஸ் கடும் தாக்கு

Published On 2017-06-27 06:12 GMT   |   Update On 2017-06-27 06:12 GMT
ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க.வுக்கு ஆதரவு அளித்த நிதிஷ்குமார் ஒரு சந்தர்ப்பவாதி என்று காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம்நபி ஆசாத் கூறியுள்ளார்.

புதுடெல்லி:

ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளர் ராம்நாத் கோவிந்தை ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆதரிக்கிறது.

பீகாரில் லல்லு பிரசாத் யாதவின் ராஷ்டீரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரசுடன் மெகா கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடித்த ஐக்கிய ஜனதா தளம் கட்சி திடீரென பா.ஜ.க.வுக்கு ஆதரவாக முடிவு எடுத்து இருப்பது ராஷ்டீரிய ஜனதா தளம், காங்கிரஸ் தலைவர்களிடம் கடும் அதிருப்தியையும், கோபத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

ஐக்கிய ஜனதா தளம் தலைவரும், பீகார் முதல்- மந்திரியுமான நிதிஷ்குமாரிடம் முடிவை மாற்றும்படி லல்லுபிரசாத் பல தடவை கோரிக்கை விடுத்தார். ஆனால் அதை நிதிஷ்குமார் ஏற்கவில்லை. இதனால் லல்லு பிரசாத் கட்சி மூத்த தலைவர்கள் தொடர்ந்து நிதிஷ்குமாரை விமர்சித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியும் நிதிஷ்குமாரை விமர்சனம் செய்ய தொடங்கியுள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம்நபி ஆசாத் இது தொடர்பாக கூறுகையில், “ஒரே கொள்கையில் ஒரு மித்த கருத்துடன் இருப்பவர்கள் ஒரே மாதிரி முடிவை எடுக்க வேண்டும். அப்படி இல்லாதவர்கள் சந்தர்ப்பவாதிகள்” என்று கூறியுள்ளார்.


லல்லு பிரசாத் யாதவின் மகன் தேஜ்பி யாதவும், நிதிஷ்குமாரை சந்தர்ப்பவாதி என்று கூறியுள்ளார். இது ஐக்கிய ஜனதா தளம் தலைவர்களிடம் அதிருப்தியை உருவாக்கியுள்ளது.

இதற்கிடையே ஐக்கிய ஜனதா தளம் கட்சி எம்.எல்.ஏ.க்கள் மனம் மாறி காங்கிரஸ் வேட்பாளர் மீரா குமாருக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என்று காங்கிரஸ் தலைவர்கள் கூறி வருகிறார்கள்.

இதை ஐக்கிய ஜனதா தளம் கட்சி மறுத்துள்ளது. ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ராம்நாத் கோவிந்துக்கு வாக்களிப்பார்கள் என்று அந்த கட்சி கூறியுள்ளது.

Tags:    

Similar News