செய்திகள்

உ.பி.யில் பயங்கரம்: முன்னாள் கிராம தலைவர் மனைவியுடன் சுட்டுக் கொலை

Published On 2017-06-23 13:19 GMT   |   Update On 2017-06-23 13:19 GMT
சிறையில் இருக்கும் மகன்களை பார்த்து விட்டு திரும்பிய முன்னாள் கிராம தலைவர் மற்றும் அவரது மனைவி மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புலந்த்சாஹர்:

உத்தரப்பிரதேசம் மாநிலம் புலந்த்சாஹர் மாவட்டத்தில் உள்ள ஹசன்கர்ஹி கிராமத்தின் முன்னாள் தலைவர் ஷாஹித் என்ற புட்டோ (55). இவரது மனைவி ரயீசா (50). இவரது 3 மகன்கள் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு மாவட்ட சிறையில் விசாரணை கைதிகளாக அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
 
இந்நிலையில், புட்டோ தனது மனைவி ரயீசாவுடன் சிறையில் இருக்கும் மகன்களை பார்க்க நேற்று இரவு சிறைக்கு சென்றார். அவர்களை பார்த்துவிட்டு பைக்கில் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.

தேசிய நெடுஞ்சாலை வழியாக ஹசன்கர்ஹி கிராமத்தை நோக்கி சென்ற வேளையில் அவர்களை பின்தொடர்ந்து வந்த ஒரு கும்பல் போக்குவரத்து நடமாட்டம் குறைவாக உள்ள ஒரு இடத்தில் புட்டோ மற்றும் அவரது மனைவியை திடீரென வழிமறித்தது.

கண்னிமைக்கும் நேரத்தில் துப்பாக்கிகளால் அவர்களை நோக்கி சரமாரியாக சுட்ட அந்த கும்பல் மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பி தலைமறைவானது. இந்த தாக்குதலில் கணவன், மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இது குறித்து புட்டோவின் சகோதரர் சாகிர் அளித்த புகாரின் பேரில் புலந்த்சாஹர் மாவட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றம்சாட்டியுள்ள ஐந்து நபர்களை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News