செய்திகள்

ஜனாதிபதி தேர்தலில் வெற்றி உறுதி: பா.ஜனதா கட்சிக்கு 54 சதவீத ஆதரவு

Published On 2017-05-29 06:53 GMT   |   Update On 2017-05-29 06:53 GMT
ஜனாதிபதி தேர்தலில் பா.ஜனதாவுக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளதாகவும் 54 சதவீத ஓட்டுகள் கிடைக்கும் எனவும் கணிக்கப்பட்டு உள்ளது.
புதுடெல்லி:

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் 5 ஆண்டு பதவி காலம் வருகிற ஜூலை மாதம் 22-ந்தேதியுடன் முடிவடைவதால் அதற்குள் புதிய ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

இன்னும் 1 மாதமே இருப்பதால் ஜனாதிபதி தேர்தலுக்கான ஏற்பாடுகளை தேர்தல் கமி‌ஷன் தொடங்கி விட்டது.

மத்தியில் ஆளும் பா.ஜனதா கட்சி தனது கூட் டணி கட்சிகள் ஆதரவுடன் தேர்தலை சந்திக்கிறது. ஜனாதிபதி பதவிக்கு யாரை நிறுத்தலாம் என்று பிரதமர் மோடி மூத்த மந்திரிகளுடனும், பா.ஜனதா தலைவர்களுடனும் ஆலோசனையை தொடங்கியுள்ளனர்.

ஜனாதிபதி பதவி என்பது நாட்டின் மிக உயர்ந்த பொறுப்பு மிக்கது. நாட்டின் முதல் குடிமகன் என போற்றப்படுகிறார். எனவே தகுதி வாய்ந்தவரை பா.ஜனதா கண்டறிந்து வருகிறது.

காங்கிரஸ் ஆட்சியின் போது ஜனாதிபதி தேர்தலில் தென்மாநிலத்தைச் சேர்ந்தவருக்கும், வட மாநிலத்தைச் சேர்ந்தவருக்கும் மாறி மாறி வாய்ப்பு அளிக்கும் முறை கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. அப்துல்கலாமுக்கு பின்பு தென்மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஜனாதிபதியாகவோ, துணை ஜனாதிபதியாகவோ தேர்வு செய்யப்படவில்லை.

பா.ஜனதா ஆட்சியில் அந்த நடைமுறை பின்பற்றப்படுமா? என தென்மாநிலங்கள் எதிர்பார்க்கின்றன. இந்த நிலையில் சமீபத்தில் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி தலித் அல்லது பழங்குடி இனத்தைச் சேர்ந்தவருக்கு வாய்ப்பு அளிக்கலாமா? என கருத்து கேட்டதாக கூறப்படுகிறது.



ஜனாதிபதி தேர்தலில் காங்கிரசும் களத்தில் குதிக்கிறது. இதற்காக எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டி வருகிறது. சமீபத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி எதிர்க்கட்சி தலைவர்களுக்கு விருந்து அளித்தார். இதில் கம்யூனிஸ்டுகள் உள்பட அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களும் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் தி.மு.க. சார்பில் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டார். அவருக்கு கூட்டத்தில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு ராகுல் காந்திக்கு அடுத்த இருக்கையில் அமர்ந்து இருந்தார். இதன்மூலம் ஜனாதிபதி தேர்தலில் காங்கிரசுக்கு தி.மு.க. ஆதரவு அளிப்பது உறுதியாகிறது.



ஜனாதிபதி தேர்தலில் பா.ஜனதா கூட்டணிக்கும், காங்கிரஸ் கூட்டணிக்கும் இடையே நேரடி மோதல் உருவாகியுள்ளது. இரு கூட்டணியிலும் வேட்பாளரை இன்னும் முடிவு செய்யவில்லை.

இதற்கிடையே ஜனாதிபதி தேர்தலில் பா.ஜனதாவுக்கே வெற்றி வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பா.ஜனதாவை அதன் கூட்டணி கட்சிகளான சிவசேனா, அகாலிதளம், அசாம் கனபரிசத், பிஜு ஜனதாதளம், தெலுங்குதேசம் ஆகிய கட்சிகள் ஆதரிக்கின்றன.

தமிழ்நாட்டில் அ.தி.மு.க. இரு அணிகளாக பிரிந்து இருந்தாலும் ஜனாதிபதி தேர்தலில் இரு அணிகளுமே போட்டி போட்டு பா.ஜனதாவை ஆதரிக்க முன் வந்துள்ளன.



தெலுங்கானா, ராஷ்டிரிய சமிதி கட்சி சமீபத்தில் அமித்ஷாவின் எதிர்ப்பு விமர்சனத்தில் அதிருப்தி அடைந்தாலும் கடைசி நேரத்தில் அந்த கட்சி சமாதானம் அடைந்து ஆதரவு அளிக்கும் முடிவு எடுக்கும் என்று கூறப்படுகிறது. ஏனெனில் மாநில வளர்ச்சிக்காக ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு பா.ஜனதாவுடன் நெருக்கமாக இருக்கிறார். எனவே தெலுங்கானா முதல்- மந்திரி சந்திரசேகர்ராவும் மாநில வளர்ச்சிக்காக தனது முடிவை மாற்றிக் கொள்வார் என்றே கருதப்படுகிறது.

ஏற்கனவே பா.ஜனதா பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்துடன் உள்ளது. பெரும்பான்மையான மாநிலங்களில் பா.ஜனதா ஆட்சியே நடக்கிறது. சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்திலும் மிகப் பெரிய வெற்றி பெற்று 3-ல் 2 பங்கு எம்.எல்.ஏ.க்களை கொண்டுள்ளது.

ஜனாதிபதியை எம்.பி.க் கள், எம்.எல்.ஏ.க்கள் ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுப்பார்கள். எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களின் ஓட்டு மதிப்பு அந்தந்த மாநிலத்தின் மக்கள் தொகைக்கு ஏற்ப மதிப்பிடப்படுகிறது. அதன்படி மொத்த ஓட்டுகள் எண்ணிக்கை 10 லட்சத்து 98 ஆயிரத்து 882 ஆக உள்ளது. இதில் மெஜாரிட்டிக்கு 5 லட்சத்து 49 ஆயிரத்து 442 ஓட்டுகள் தேவை. இப்போதைய நிலவரப்படி அ.தி.மு.க., தெலுங்கானா கட்சி ஆகியவற்றின் ஆதரவுடன் பா.ஜனதாவுக்கு 54 சதவீத ஓட்டுகள் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.

கடைசி நேரத்தில் மேலும் சில கட்சிகள் பா.ஜனதாவை ஆதரிக்க முன்வரும் என்று பா.ஜனதா தலைவர்கள் கூறி வருகிறார்கள். மெஜாரிட்டியையும் தாண்டி மிகப்பெரிய வெற்றி பெறுவோம் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
Tags:    

Similar News