செய்திகள்

கேரளாவில் நடுரோட்டில் கன்றுகுட்டியை வெட்டிய இளைஞர் காங்கிரசார்: ராகுல் கண்டனம்

Published On 2017-05-29 05:17 GMT   |   Update On 2017-05-29 05:17 GMT
கேரள மாநிலத்தில் இளைஞர் காங்கிரசார் நடுரோட்டில் கன்று குட்டியை வெட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்திற்கு ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரம்:

மத்திய அரசு இறைச்சிக்காக மாடு, ஒட்டகங்களை விற்கவோ, வாங்கவோ தடை விதித்துள்ளது. இதற்கு பல்வேறு மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. மத்திய அரசின் இந்த திட்டத்தை உடனே திரும்ப பெற வேண்டும் என்று கோரி போராட்டங்களும் நடந்து வருகிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆட்சி நடக்கும் கேரளாவில் இந்த சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் ஆகியவை இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பொது இடத்தில் மாட்டுக்கறி விருந்து நடத்தி, தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள்.

மாநில தலைநகரான திருவனந்தபுரம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இந்த மாட்டுக்கறி விருந்து நடைபெற்றது. பொது மக்களும் இவர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

இந்த நிலையில் கேரள மாநிலம் கண்ணூரில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் நடந்த போராட்டத்தில் நடுரோட்டில் கன்று குட்டியை வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



இளைஞர் காங்கிரஸ் பாராளுமன்ற தலைவர் ரெஜிஸ் தலைமையிலான தொண்டர்கள் தங்கள் போராட்டத்தின்போது, ஒரு கன்று குட்டியை நடுரோட்டில் வெட்டி அதன் இறைச்சியை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

நடுரோட்டில் கன்று குட்டியை இளைஞர் காங்கிரசார் வெட்டும் காட்சி அடங்கிய வீடியோ வாட்ஸ்- அப்பிலும் பரவியது. இந்த செயலுக்கு சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி கவனத்திற்கும் இந்த தகவல் கொண்டு செல்லப்பட்டது. அவரும் இளைஞர் காங்கிரசாரின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.



இது தொடர்பாக ராகுல்காந்தி, டுவிட்டரில் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். அதில், இந்த செயலை யாரும் ஏற்றுக்கொள்ள முடியாது. இது காட்டுமிராண்டித்தனமான செயலாகும். இதில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களை காப்பாற்ற கட்சி எந்த நடவடிக்கையும் எடுக்காது என்று கூறி உள்ளார்.

இதற்கிடையில் நடுரோட்டில் கன்று குட்டியை வெட்டியது தொடர்பாக இளைஞர் காங்கிரஸ் பாராளுமன்ற மண்டல தலைவர் ரெஜிஸ் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் மீது கண்ணூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

120ஏ பிரிவின் கீழ் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஓராண்டு ஜெயில் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும்.
Tags:    

Similar News