செய்திகள்

ஜனாதிபதி தேர்தலில் பா.ஜனதாவுக்கு ஆதரவு இல்லை: சந்திரசேகரராவ் முடிவில் மாற்றம்

Published On 2017-05-25 05:38 GMT   |   Update On 2017-05-25 05:38 GMT
ஜனாதிபதி தேர்தலில் பாரதிய ஜனதாவை ஆதரிக்கும் முடிவை மறுபரிசீலனை செய்வேன் என்று சந்திரசேகரராவ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஐதராபாத்:

பா.ஜனதா தலைவர் அமித்ஷா தெலுங்கானா மாநிலத்தில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது தெலுங்கானா ஆட்சி பற்றியும் முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் பற்றியும் கடுமையாக விமர்சனம் செய்தார்.

மத்திய அரசின் பல திட்டங்களை மாநில அரசு நிறைவேற்ற தவறி விட்டது என்று குற்றம் சாட்டினார்.

இது முதல்-மந்திரி சந்திரசேகரராவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர் மத்திய பா.ஜனதா அரசை ஆதரித்து வருகிறார். பாராளுமன்றத்திலும் பா.ஜனதாவுக்கு ஆதரவாக தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி எம்.பி.க்கள் செயல்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் அமித்ஷா பேசியிருப்பது இரு கட்சிகள் இடையேயான உறவில் பாதிப்பை ஏற்படுத்தும் நிலையை உருவாக்கியுள்ளது.

அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில் ஜூலை மாதம் நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் பா.ஜனதாவுக்கு ஆதரவு அளிக்கும் முடிவை மறு பரிசீலனை செய்வேன் என்று சந்திரசேகரராவ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுபற்றி சந்திரசேகரராவ் நேற்று ஐதராபாத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

பிரதமர் மோடி மீது நான் மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கிறேன். அப்படி இருக்கும் போது அமித்ஷா கூறியிருப்பது வியப்பாக உள்ளது. பா.ஜனதா அமித்ஷாவின் விமர்சனத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில் ஜனாதிபதி தேர்தலில் எங்கள் ஆதரவை மறுபரிசீலனை செய்வோம்.


அமித்ஷாவின் விமர்சனம் என்னை மிகவும் நோகடித்து விட்டது. அவர் தெலுங்கானாவை எதிரி என்று கூறியுள்ளது மன்னிக்க முடியாதது ஆகும்.

இந்த மண்ணில் இருந்து கொண்டு அவரால் எப்படி இதுபோல் பேச முடிந்தது. அமித்ஷா இந்த மாநிலத்தை விட்டு வெளியேறும் முன் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில் தெலுங்கானா மக்கள் அவரை மன்னிக்க மாட்டார்கள். இது தெலுங்கானா மக்களின் சுயமரியாதைக்கு விடப்பட்ட சவாலாக கருதுகிறேன்.

கழிவறை கட்டும் திட்டம் உள்பட பல்வேறு மத்திய அரசு திட்டங்களை மாநில அரசு நிறைவேற்றவில்லை என்று அமித்ஷா கூறியிருப்பது ஆதாரமற்ற குற்றச்சாட்டு. அதை மறுக்கிறேன்.

இவ்வாறு சந்திரசேகரராவ் கூறினார்.

மேலும் அமித்ஷா நல்கொண்டா மாவட்டத்தில் தலித் வீட்டில் சாப்பிட்டதையும் சந்திரசேகரராவ் குறை கூறினார். அமித்ஷா தலித் வீட்டில் சாப்பிட்டதாக நாடகம் ஆடுகிறார். உண்மையில் அவர் சாப்பிட்ட உணவை மனோகர் ரெட்டி என்பவர் தான் தயாரித்து கொடுத்தார். இதை அறிந்த தலித் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர் என்று சந்திரசேகரராவ் கூறினார்.
Tags:    

Similar News