உள்ளூர் செய்திகள்

முதல் பழங்குடியின ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்முவுக்கு பா.ம.க ஆதரவு- ராமதாஸ் அறிவிப்பு

Published On 2022-06-22 09:49 GMT   |   Update On 2022-06-22 09:49 GMT
  • குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ம.க.வை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினரும், சட்டப்பேரவை உறுப்பினர்களும் திரவுபதி முர்முவை ஆதரிப்பது என்று பா.ம.க. உயர்நிலைக் குழு கூட்டத்தில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.
  • இந்தியக் குடியரசின் 72 ஆண்டு கால வரலாற்றில் பழங்குடியின பெண்மணி ஒருவரை முதன்முறையாக குடியரசுத் தலைவராக்க ஆதரவளிப்பதில் பா.ம.க. மகிழ்ச்சியும், பெருமிதமும் அடைகிறது.

சென்னை:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பா.ம.க. தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான டாக்டர் அன்புமணி ராமதாசை, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், பா.ஜனதா கட்சியின் தலைவர் ஜே.பி. நட்டாவும் நேற்று மாலை தொடர்பு கொண்டு, குடியரசுத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக ஜார்க்கண்ட் மாநில முன்னாள் ஆளுனராகிய திரவுபதி முர்முவை களமிறக்க முடிவு செய்திருப்பதாக தெரிவித்தனர். அவருக்கு பா.ம.க. ஆதரவளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.

இந்தக் கோரிக்கை குறித்து ராமதாஸ், பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் உயர்நிலைக் குழு உறுப்பினர்களுடன் இன்று காலை கலந்தாய்வு நடத்தினார்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் திரவுபதி முர்மு ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த பழங்குடியின பெண்மணி ஆவார். மிகவும் சாதாரண குடும்பத்தில் பிறந்த அவர், பல தடைகளை முறியடித்து பொதுவாழ்வில் முன்னேறியவர். ஜார்க்கண்ட் கவர்னராக 6 ஆண்டுகளுக்கு மேல் சிறப்பாக பணியாற்றியவர் என்ற பெருமையும் அவருக்கு உண்டு.

திரவுபதி முர்மு தேர்தலில் வெற்றி பெற்று குடியரசுத் தலைவராக பொறுப்பேற்கும்போது அந்தப் பதவியை அலங்கரிக்கும் முதலாவது பழங்குடியினராகவும், 2-வது பெண்மணியாகவும் இருப்பார். பழங்குடியினர் ஒருவரை குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுப்பது அந்த இனத்திற்கு அளிக்கப்படும் அங்கீகாரம் என்பதாலும், செய்யப்படும் பெருமை என்பதாலும் குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ம.க.வை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினரும், சட்டப்பேரவை உறுப்பினர்களும் திரவுபதி முர்முவை ஆதரிப்பது என்று பா.ம.க. உயர்நிலைக் குழு கூட்டத்தில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.

இந்தியக் குடியரசின் 72 ஆண்டு கால வரலாற்றில் பழங்குடியின பெண்மணி ஒருவரை முதன்முறையாக குடியரசுத் தலைவராக்க ஆதரவளிப்பதில் பா.ம.க. மகிழ்ச்சியும், பெருமிதமும் அடைகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News