உள்ளூர் செய்திகள்

மதுரை அரசு மருத்துவமனையில் எலும்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவரை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.மூர்த்தி ஆகியோர் சந்தித்து நலம் விசாரித்தனர். அருகில் கலெக்டர் அனீஷ்சேகர், பூமிநாதன் எம்.எல்.ஏ., டீன் ரத்தினவேல் உள்ளனர்.

தடுப்பூசி செலுத்துவதில் மதுரை பின்தங்கியுள்ளது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

Published On 2022-07-26 09:18 GMT   |   Update On 2022-07-26 09:18 GMT
  • தடுப்பூசி செலுத்துவதில் மதுரை பின்தங்கியுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி அளித்தார்.
  • மதுரை மாவட்டத்தில் முதல் தவணை 86.20 சதவீதமும், 2-ம் தவணை 75.02 சதவீதமுமாக உள்ளது.

மதுரை

சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று மதுரை விமான நிலையத்தில் குரங்கம்மை பரிசோதனை தொடர்பாக ஆய்வு செய்தார். பின்னர் சேடபட்டி ஊராட்சி ஒன்றியம் பெருங்காமநல்லூர், இ.கோட்டைப்பட்டி, மள்ளப்புரம், உத்தப்புரம் ஆகிய கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள அரசு துணை சுகாதார நிலையங்களை திறந்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார். அங்கு எலும்பு மாற்று அறுவை சிகிச்சை செய்த நோயாளியை சந்தித்து நலம் விசாரித்தார்.பின்னர் அமைச்சர் நிருபர்களிடம் கூறியதாவது;-

மதுரை மாவட்டத்தில் தலா ரூ.25 லட்சம் மதிப்பு உடைய 4 துணை சுகாதார நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டு உள்ளன. முதல்வராக மு.க. ஸ்டாலின் பதவி ஏற்ற நாள் முதல், மதுரை அரசு ஆஸ்பத்திரியில் புதிய, புதிய வசதிகள் செய்து தரப்பட்டு வருகின்றன. அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி ஆகியோர் மதுரை மாவட்டத்திற்கான மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான வசதிகளை கேட்டு பெற்று வருகின்றனர்.

மதுரை கிழக்கு தொகுதியில் 3 துணை சுகாதார நிலையங்கள் அமைப்பது தொடர்பாக அமைச்சர் மூர்த்தி கோரிக்கை விடுத்து உள்ளார். மதுரை அரசு மருத்துவமனையில் கடந்த டிசம்பர் மாதம் 21-ந் தேதி ரூ.40 லட்சம் செலவில் எலும்பு வங்கி திறக்கப்பட்டது. அரசு ஆஸ்பத்திரிகளில் எலும்பு வங்கியின் தேவை, அத்தியாவசியம் ஆகும்.

தமிழகத்தில் கோவை தனியார் ஆஸ்பத்திரி மற்றும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை ஆகியவற்றில் மட்டுமே எலும்பு மாற்று அறுவை சிகிச்சை நடத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் மதுரை அரசு ஆஸ்பத்திரி, எலும்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து மகத்தான சாதனை படைத்து உள்ளது. மதுரை அரசு ஆஸ்பத்திரியில் இறந்த 2 பேரிடம் இருந்து 36 எலும்புகள் மற்றும் ஜவ்வுகள் பெறப்பட்டு பத்திரமாக சேமிக்கப்பட்டு வருகிறது. அவற்றின் வாயிலாக 7 பேருக்கு எலும்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் தொடங்கப்பட்ட இன்னுயிர் காப்போம் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில், மதுரை அரசு மருத்துவமனை முதலிடத்தில் உள்ளது .

தமிழகம் முழுவதும் இன்னுயிர் காப்போம் திட்டம் வாயிலாக 96,807 பேர் சிகிச்சை பெற்று உள்ளனர். மதுரை அரசு மருத்துவமனையில் மட்டும் இதுவரை 3185 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் இதுவரை முதல் தவணையாக 95.95 சதவீதமும், 2-ம் தவணையாக 88.52 சதவீதம் பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. மதுரை மாவட்டத்தில் முதல் தவணை 86.20 சதவீதமும், 2-ம் தவணை 75.02 சதவீதமுமாக உள்ளது.

தடுப்பூசி செலுத்தி கொள்ளும் பெரு நகரங்களில் மதுரை பின்தங்கிய நிலையில் உள்ளது. இங்கு தடுப்பூசி சதவீத குறைப்பாட்டை நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வருகிற 7-ந் தேதி 50 ஆயிரம் இடங்களில் தடுப்பூசி முகாம் நடக்கிறது.

மதுரை எய்ம்ஸ் கட்டிட வடிவமைப்பிற்கான டெண்டர் விடும் பணிகள் நடந்து வருகிறது. விரைவில் வரைபடம் தயாரித்து எய்ம்ஸ் அமைய உள்ள இடத்தில் காட்சிப்படுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News