தமிழ்நாடு

சென்னையில் 'அனைத்து' பேருந்துகளிலும் பெண்களுக்கு 'இலவச' பயணம் - எப்போது?

Published On 2024-05-02 08:26 GMT   |   Update On 2024-05-02 08:26 GMT
  • சென்னையில் மொத்தம் 3,233 மாநகர பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில் பிங்க் நிறத்தில் மட்டும் 1,600 பஸ்கள் இயக்கப்படுகின்றன.
  • பிங்க் நிற பஸ்களில் மட்டுமே பெண்கள் இலவச பயணத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் அந்த பஸ்களில் பயணிகளின் கூட்டம் அதிகரித்துள்ளது.

சென்னை:

தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலின் போது தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் நகர பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்ய அனுமதி வழங்கப்படும் என்ற வாக்குறுதியை அளித்திருந்தது. இந்த நிலையில் சட்டசபை தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றதும், நகர பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் திட்டம் அமல்படுத்தப்பட்டது.

அதன்படி சென்னை உள்ளிட்ட அனைத்து நகரங்களிலும் பெண்கள் 'ஒயிட் போர்டு' எனப்படும் சாதாரண பஸ்களில் இலவசமாக பயணம் செய்து வருகிறார்கள். 'ஒயிட் போர்டு' பஸ்களை பெண்கள் கண்டறிவதில் சிரமம் இருந்ததால் அந்த பஸ்களின் முன்புறமும், பின்புறமும் 'பிங்க்' நிற வண்ணம் அடிக்கப்பட்டுள்ளது. இதனால் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் இந்த பஸ்கள் 'பிங்க்' நிற பஸ்கள் என்று அழைக்கப்படுகின்றன.


சென்னை மாநகரில் தற்போது ஒயிட் போர்டு எனப்படும் பிங்க் நிற பஸ்கள், எக்ஸ்பிரஸ் பஸ்கள், சொகுசு பஸ்கள், குளிர்சாதன வசதி கொண்ட பஸ்கள், சிற்றுந்துகள் ஆகிய 5 வகைகளில் மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

சென்னையில் மொத்தம் 3,233 மாநகர பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில் பிங்க் நிறத்தில் மட்டும் 1,600 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த 1,600 பஸ்களில் மட்டுமே பெண்கள் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். அதேபோல் கிராமப்புறங்களில் உள்ள நகர பஸ்களிலும், பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இந்த திட்டத்துக்கு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால், இத்திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த, அரசு போக்குவரத்துக் கழகங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன. தமிழகம் முழுவதும், தினமும் சராசரியாக, 49 லட்சம் பெண்கள் சாதாரண பஸ்களில் இலவசமாக பயணம் செய்து வருகின்றனர். இதனால், அரசு பஸ்களில் பயணம் செய்யும் பெண் பயணிகளின் எண்ணிக்கை 62 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் சென்னையில் பிங்க் நிற பஸ்களில் மட்டுமே பெண்கள் இலவச பயணத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் அந்த பஸ்களில் பயணிகளின் கூட்டம் அதிகரித்துள்ளது. எனவே இந்த இலவச பயண திட்டத்தை மற்ற பஸ்களுக்கும் விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:-

சென்னை உள்ளிட்ட நகரங்களில் 'ஒயிட் போர்டு' எனப்படும் சாதாரண பஸ்களில் மட்டுமே பெண்கள் இலவசமாக பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் பள்ளி மாணவ-மாணவிகளும் இந்த பஸ்களில் தான் இலவச பயணம் மேற்கொண்டு வருகிறார்கள்.

மேலும் இந்த பஸ்களில் பயணம் செய்யும் ஆண்களுக்கும் கட்டணம் குறைவாகவே உள்ளது. இதனால் பெரும்பாலான ஆண்களும் இந்த பஸ்களிலேயே பயணம் செய்ய விரும்புகிறார்கள். இதனால் சென்னையில் இயக்கப்படும் 1,600 சாதாரண பஸ்களிலும் எப்போதும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது.


அதே நேரத்தில் பெண்கள் கட்டணம் செலுத்தி பயணம் செய்யும் எக்ஸ்பிரஸ் மற்றும் சொகுசு பஸ்கள் பெரும்பாலும் பயணிகள் நெரிசல் இன்றி காலியாகவே செல்கின்றன. எனவே சாதாரண பஸ்களில் பயணிகளின் நெரிசலை தவிர்க்கும் வகையில் எக்ஸ்பிரஸ் மற்றும் சொகுசு பஸ்களிலும் பெண்கள் இலவச பயணம் செய்ய அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே எக்ஸ்பிரஸ் மற்றும் சொகுசு பஸ்களில் பெண்கள் எத்தனை பேர் பயணம் செய்கிறார்கள் என கணக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ளது.

சென்னை பிராட்வே, தாம்பரம், கூடுவாஞ்சேரி, கிளாம்பாக்கம், திருவான்மியூர், கேளம்பாக்கம், திருவொற்றியூர், பூந்தமல்லி, சோழிங்கநல்லுார் உள்ளிட்ட முக்கிய வழித்தடங்களில், எக்ஸ்பிரஸ் மற்றும் சொகுசு பஸ்களில் பயணிக்கும் பெண்கள் குறித்து கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. அந்தந்த பஸ்களில் உள்ள கண்டக்டர்கள் கடந்த 2 நாட்களாக கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். 2 மாதங்கள் இந்த கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ளது. அதன் பிறகு எக்ஸ்பிரஸ் மற்றும் சொகுசு பஸ்களில் பெண்கள் எத்தனை பேர் பயணம் செய்கிறார்கள் என்பது கண்டறியப்படும்.

சாதாரண பஸ்களில் எத்தனை பெண்கள் பயணம் செய்கிறார்கள் என்பதை இலவச டிக்கெட் மூலம் கணக்கெடுத்து விட்டோம். எக்ஸ்பிரஸ் மற்றும் சொகுசு பஸ்களில் கணக்கெடுப்பு பணி முடிந்ததும் இன்னும் 6 மாதங்களுக்குள் எக்ஸ்பிரஸ் மற்றும் சொகுசு பஸ்களிலும் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் திட்டம் அமலுக்கு வருகிறது. அதன்பிறகு சாதாரண பஸ்களில் பயணிகளின் நெரிசல் குறைய வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

Similar News