தமிழ்நாடு

சென்னை, காஞ்சிபுரம் தொழிலதிபர்கள் உள்பட 50 பேரை வலையில் வீழ்த்தி பணம் பறித்த பெண்

Published On 2024-05-02 09:26 GMT   |   Update On 2024-05-02 09:26 GMT
  • பல வருடங்களாக பல தொழில் அதிபர்களை தங்கள் வலையில் சிக்கவைத்து லட்சக்கணக்கில் பணம் பறித்தது தெரியவந்தது.
  • வெளிமாவட்டங்கள் மட்டுமல்லாது நெல்லை மாவட்டத்திலும் சில தொழிலதிபர்கள் சபலத்தால் இந்த கும்பலிடம் சிக்கி பணத்தை இழந்துள்ளனர்.

நெல்லை:

சேலம் மாவட்டம் அய்யன் பெருமாள்பட்டியை சேர்ந்தவர் நித்தியானந்தம் (வயது 47). இவர் காற்றாலைகளுக்கு மின் உபகரணங்கள் வாங்கி மொத்தமாக விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார்.

இவருக்கு முகநூல் (பேஸ்புக்) மூலமாக பாளையங்கோட்டை பெருமாள்புரம் என்.ஜி.ஓ. காலனியை சேர்ந்த பானுமதி(40) என்ற பெண்ணுடன் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து, பானுமதி கடந்த 29-ந்தேதி ஆசை வார்த்தை கூறி நித்யானந்தமை நெல்லைக்கு வரவழைத்துள்ளார். பின்னர் பானுமதி வீட்டுக்கு சென்ற அவரை அங்கிருந்த மேலும் 4 பேர் கும்பல் சேர்ந்து கடத்தி சென்று நகை, ரூ.10 லட்சம் பணம் உள்ளிட்டவற்றை பறித்தது.

இதுகுறித்து நித்யானந்தம் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் மூர்த்தியிடம் அளித்த புகாரின்பேரில் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் அருணாச்சலம் தலைமையிலான போலீசார் பானுமதி, அவரது கூட்டாளிகளான ஆழ்வார்திருநகரியை சேர்ந்த பார்த்தசாரதி(46), வெள்ளத்துரை(42), ரஞ்சித்(42), ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த சுடலை(40) ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

அந்த கும்பலிடம் நடத்திய விசாரணையில் பானுமதி மற்றும் அவரது கூட்டாளிகள் இதேபோல் பல வருடங்களாக பல தொழில் அதிபர்களை தங்கள் வலையில் சிக்கவைத்து லட்சக்கணக்கில் பணம் பறித்தது தெரியவந்தது. இதுதொடர்பான தகவல்கள் வருமாறு:-

பானுமதிக்கு ஆழ்வார்திருநகரியை சேர்ந்த ஒருவருடன் திருமணமாகி கல்லூரி படிப்பு முடித்த ஒரு மகனும், 10-ம் வகுப்பு படிக்கும் ஒரு மகளும் உள்ளனர். இவரது நடவடிக்கைகள் சரியாக இல்லாததால், அவரது குடும்பத்தினர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பானுமதியை வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டனர்.

இந்நிலையில் பானுமதிக்கு தனது பள்ளி தோழனான ஆழ்வார்திருநகரியை சேர்ந்த வெள்ளத்துரையுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் கடந்த 7 ஆண்டுகளாக அவருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் 2 பேரும் ஆடம்பர வாழ்க்கை வாழ்வதற்கு ஆசைப்பட்டுள்ளனர். பானுமதி பட்டப்படிப்பு முடித்தவர் என்பதால் முகநூலை பயன்படுத்தி அதில் தொழில் அதிபர்கள் மற்றும் கோடீஸ்வரர்களை தொடர்பு கொண்டு பழகி வந்துள்ளார்.

அவர்களிடம் மாதக்கணக்கில் பழகி நம்ப வைத்து, ஆசை வார்த்தை கூறி நெல்லைக்கு வரவழைத்துள்ளார். பின்னர் பெருமாள்புரம் என்.ஜி.ஓ. காலனியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள தனது வீட்டுக்கு அவர் தொழிலதிபர்களை வரவழைத்து படுக்கை அறைக்கு அழைத்து சென்று கதவுகளை பூட்டிக்கொள்வார். அடுத்த 5 நிமிடங்களில் வெள்ளத்துரை தனது கூட்டாளிகள் 3 பேருடன் அங்கு வந்து கதவை தட்டுவார்.

பின்னர் எனது மனைவியை கற்பழிக்க முயன்றுள்ளாய் என கூறி போலீசில் புகார் அளித்து உன்னை அவமானப்படுத்தி விடுவேன் என்று கூறி அந்த தொழில் அதிபர்களை மிரட்டி அவர்களிடம் இருக்கும் நகை மற்றும் உடைமைகளை பறித்து வந்துள்ளனர்.

தங்களின் பிடியில் சிக்கும் தொழிலதிபர்களை பொன்னாக்குடி பகுதிக்கு அழைத்து சென்று அங்குள்ள ஒரு காட்டுப்பகுதியில் தங்களது பெயரில் உள்ள ஒரு தனி பண்ணை வீட்டில் அடைத்து வைத்து லட்சக்கணக்கில் பணம் பறித்து வந்துள்ளனர்.

சுமார் 6 ஆண்டுகளுக்கு மேல் இந்த கும்பல் சென்னை, கோவை, காஞ்சிபுரம், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த தொழிலதிபர்களை குறிவைத்து ஆசைவார்த்தை பேசி நெல்லைக்கு வரவழைத்து அவர்களிடம் பணத்தை பறிக்கும் செயலில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இவர்களது வலையில், 40 வயதில் தொடங்கி 65 வயது வரையிலான தொழிலதிபர்கள் 50-க்கும் மேற்பட்டோர் சபலத்தால் சிக்கி பணத்தை இழந்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவ்வாறாக அந்த கும்பல் கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்துள்ளது.

வெளிமாவட்டங்கள் மட்டுமல்லாது நெல்லை மாவட்டத்திலும் சில தொழிலதிபர்கள் சபலத்தால் இந்த கும்பலிடம் சிக்கி பணத்தை இழந்துள்ளனர். ஆனால் வெளியே தெரிந்தால் அவமானமாகிவிடும். அதற்கு பணத்தோடு போகட்டும் என்று அவர்கள் வெளியே தெரிவிக்காமல் இருக்கின்றனர் என்று போலீசார் தெரிவித்தனர்.

இதற்கிடையே பார்த்தசாரதியை தவிர மற்ற 4 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பார்த்தசாரதிக்கு ரத்த அழுத்தம் அதிகமாக இருப்பதால் நெல்லை அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து மாநகர போலீஸ் கமிஷனர் கூறுகையில், பல வருடங்களாக இந்த கும்பல் தொழிலதிபர்களை ஆசை வார்த்தை கூறி அழைத்து பணத்தை பறித்து வந்துள்ளனர்.

இந்த கும்பலிடம் தங்களது பணத்தை இழந்தவர்கள் வெளியே சொல்லாமல் இருக்கிறார்கள். இன்று அல்லது நாளை அந்த கும்பலை காவலில் எடுத்து விசாரிக்க உள்ளோம். அதன்பின்னரே இதுவரை எத்தனை தொழிலதிபர்களை ஏமாற்றி எவ்வளவு பணத்தை இவர்கள் பறித்துள்ளனர் என்ற விபரம் தெரியவரும்.

அதேநேரத்தில் பணத்தை இழந்த தொழிலதிபர்கள் எங்களிடம் வந்து புகார் அளிக்கும் பட்சத்தில் அவர்கள் பெயர் ரகசியம் காக்கப்பட்டு அவர்களது பணத்தை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Tags:    

Similar News