தமிழ்நாடு செய்திகள்

மத்திய அரசை கண்டித்து தஞ்சையில் விவசாயிகள் ரெயில் மறியல் போராட்டம்: 100-க்கும் மேற்பட்டோர் கைது

Published On 2025-12-05 13:54 IST   |   Update On 2025-12-05 13:54:00 IST
  • திருச்சியில் இருந்து சென்னை நோக்கி வந்த சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலை மறித்து தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  • மேகதாதுவில் அணைகட்ட விட மாட்டோம் என கோஷமிட்டனர்.

தஞ்சாவூா்:

கர்நாடகா அரசிற்கு மேகதாதுவில் அணைக்கட்ட வரைவு திட்ட அறிக்கைக்கு அனுமதி அளித்து தமிழ்நாட்டை பாலைவனமாக்க நினைக்கும் உச்சநீதிமன்ற தீர்ப்பையும், மத்திய அரசையும் கண்டித்து இன்று தஞ்சையில் ரெயில் மறியல் போராட்டம் நடத்துவோம் என்று தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தினர் அறிவித்திருந்தனர்.

இதையொட்டி இன்று தஞ்சை ரெயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் பழனியப்பன் தலைமையில் நிர்வாகிகள் மற்றும் பல்வேறு விவசாய சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் என ஏராளமானோர் ரெயில் நிலையம் முன்பு திரண்டனர்.

பின்னர் ஊர்வலமாக கோஷங்கள் எழுப்பியவாறே தடைகள், தடுப்புகளை மீறி ரெயில் நிலையத்திற்குள் நுழைந்தனர்.

அப்போது திருச்சியில் இருந்து சென்னை நோக்கி வந்த சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலை மறித்து தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். உச்சநீதிமன்றம், மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். மேகதாதுவில் அணைகட்ட விட மாட்டோம் என கோஷமிட்டனர்.

இதையடுத்து ரெயில் மறியலில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு சென்றது. இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News