தி.மு.க. அரசின் பொய்களை தெளிவாக எடுத்துரைக்கிறார்: விஜய்க்கு, தமிழிசை சவுந்தரராஜன் திடீர் பாராட்டு
- மாவட்டம் தோறும் 'கோரிக்கை பெட்டிகளை' வைத்து மக்களிடமிருந்து கருத்துக்களைப் பெற்றுள்ளோம்.
- தமிழக அரசியலில் 'பெட்டி' என்றாலே அதற்கு அர்த்தமே வேறு.
சென்னை:
சட்டசபை தேர்தலை சந்திக்க பா.ஜ.க. தீவிரமாகி வருகிறது. அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றாலும் பா.ஜ.க. தனி தேர்தல் அறிக்கையை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக கடந்த மாதம் மக்களிடம் கருத்து கேட்க தேர்தல் அறிக்கை பெட்டிகளை தமிழகம் முழுவதும் அனுப்பி வைத்தது.
இதற்கிடையே, சென்னை அமைந்தகரையில் உள்ள தமிழக பா.ஜ.க. தேர்தல் அலுவலகத்தில், 234 சட்டசபை தொகுதிகளில் மக்களிடம் இருந்து பெறப்பட்ட ஆலோசனைகள், கருத்துக்கள் அடங்கிய தேர்தல் அறிக்கை பெட்டிகளை, பா.ஜ.க. மாநில நிர்வாகிகளிடம், தேர்தல் அறிக்கை குழு தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வழங்கினார்.
இந்த நிகழ்வில், மாநில துணை தலைவர்கள் கரு.நாகராஜன், கே.பி.ராமலிங்கம், தன்னார்வ தொண்டு நிறுவன பிரிவு மாநில அமைப்பாளர் அர்ஜூனமூர்த்தி, மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வெறும் குளிர்சாதன அறைகளில் அமர்ந்துகொண்டு உருவாக்குவது அல்ல தேர்தல் அறிக்கை, நேரடியாக மக்கள் மன்றத்துக்கே சென்று அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுள்ளோம். இதற்காக, மாவட்டம் தோறும் 'கோரிக்கை பெட்டிகளை' வைத்து மக்களிடமிருந்து கருத்துக்களைப் பெற்றுள்ளோம்.
தமிழக அரசியலில் 'பெட்டி' என்றாலே அதற்கு அர்த்தமே வேறு. கூட்டணிக்கு முன்பாகப் பெட்டி கைமாறுகிறதா? அல்லது கூட்டணிக்குப் பின்னால் கைமாறுகிறதா? என்பதே பலருக்கும் தெரியாது. ஆனால், எங்களிடம் அந்த 'பெட்டி' கலாசாரம் கிடையாது. நாங்கள் தேர்தல் அறிக்கைக்கு முன்பாக வெறும் பெட்டியைக் கொடுத்து, மக்களின் நம்பிக்கையை நிரப்பிக் கோரிக்கை பெட்டியாகத் திரும்பப் பெற்றிருக்கிறோம்.
நாங்கள் சற்றும் எதிர்பாராத அளவுக்கு, பொதுமக்கள் பெருமளவில் ஆர்வத்துடன் தங்கள் கோரிக்கைகளை இந்தப் பெட்டிகளில் சமர்ப்பித்துள்ளனர். பா.ஜ.க. மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மீது மக்கள் எந்த அளவுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை வைத்துள்ளார்கள் என்பதற்கு இதுவே சாட்சி.
இந்தக் கோரிக்கைப் பெட்டிகள் விரைவில் வாக்குப்பெட்டிகளாக மாறி, தமிழக மக்கள் எங்களுக்கு மாபெரும் வாய்ப்பினைத் தருவார்கள் என்பது உறுதி.
தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு வெளியே வந்த முதலமைச்சர் "எல்லாம் முடிந்துவிட்டது" என ஒரு செய்கையைக் காட்டிவிட்டுச் சென்றார். உண்மையில் அவரது அந்தச் செய்கையைப் பார்க்கும்போது, "தி.மு.க. ஆட்சியே முடிந்துவிட்டது" என்பதைக் குறிப்பது போலத்தான் எனக்குத் தோன்றியது.
எங்களை 'அடிமைக் கூட்டணி' என்று விமர்சித்தவர்களைப் பார்த்து நான் பகிரங்கமாகக் கேட்கிறேன். தி.மு.க. -காங்கிரசுக்கு அடிமையா? அல்லது காங்கிரஸ், தி.மு.க.வுக்கு அடிமையா?.
தி.மு.க. அரசின் பொய்களை மக்கள் சந்திப்பு நிகழ்வுகளில் விஜய் மிகத் தெளிவாக எடுத்து கூறியுள்ளார். அந்த வகையில் அவரை நான் பாராட்டுகிறேன். விஜய்யின் இந்தத் தி.மு.க. எதிர்ப்பு நிலைப்பாட்டையும், கருத்துகளையும் நான் வலிமையாக ஆதரிக்கிறேன் என்றார்.