என்னிடமே கேட்கிறாயா... பேருந்தில் டிக்கெட் கேட்ட நடத்துனரை தாக்கிய கல்லூரி மாணவர்
- நடத்துனர் அந்த கல்லூரி மாணவரிடம் டிக்கெட் கேட்டுள்ளார்.
- சாமிநாதன் போலீசாரிடம் நடந்த சம்பவத்தை கூறி புகார் அளித்தார்.
தளி:
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து கல்லுபாலம் கிராமத்திற்கு 43 நம்பர் அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்து நேற்று மாலை தேன்கனிக்கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு சென்றுள்ளது.
அரசு பேருந்தை வேலன் என்பவர் ஓட்டி சென்று உள்ளார். நடத்துனர் சாமி நாதன் (வயது39) பயணிகளிடம் டிக்கெட் வாங்கி உள்ளார்.
அப்போது தேன்கனிக்கோட்டை பேருந்து நிலையத்தில் அந்த அரசு பேருந்தில் ஏறிய கல்லூரி மாணவர் ஒருவரிடம் நடத்துனர் சாமிநாதன் டிக்கெட் கேட்டு உள்ளார். அதற்கு அந்த மாணவர் டிக்கெட் எடுக்காமல் நின்றுள்ளார்.
பேருந்து தளி சாலையில் அன்னியாளம் கிராமத்தை நோக்கி சென்றபோது மீண்டும் நடத்துனர் அந்த கல்லூரி மாணவரிடம் டிக்கெட் கேட்டுள்ளார்.
அதற்கு அந்த மாணவர் என்னிடமே டிக்கெட் கேட்கிறாயா எனக்கூறி நடத்துனர் சாமிநாதனை முகத்தில் குத்தியதாக கூறப்படுகிறது.
இதில் அவருக்கு வாய் பகுதியில் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது. இதனால் இருவருக்கும் இடையே பேருந்தில் தகராறும் ஏற்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து நடத்துனர் சாமிநாதன் அந்த மாணவரை பேருந்திலேயே மடக்கி பிடித்து, தேன்கனிக்கோட்டை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
பின்னர் சாமிநாதன் போலீசாரிடம் நடந்த சம்பவத்தை கூறி புகார் அளித்தார். போலீசார் பேருந்து நடத்துனரை தாக்கிய கல்லூரி மாண வரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காயமடைந்த அரசு பேருந்து நடத்துனர் சாமி நாதன் சிகிச்சைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் அந்த அரசு பேருந்தில் பயணம் செய்த பயணிகள் மற்றும் மாணவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.