தமிழ்நாடு செய்திகள்

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி நியமனம்!

Published On 2026-03-05 16:27 IST   |   Update On 2026-03-05 16:27:00 IST
  • நீதிபதி மணிந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா இன்றுடன் பணி ஓய்வு பெற்றார்
  • எஸ்.ஏ. தர்மாதிகாரி 15 ஆண்டுகள் மத்திய அரசின் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.

கேரள உயர் நீதிமன்ற நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரியை சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமித்து மத்திய சட்ட மற்றும் நீதி அமைச்சகம் அரசாணை வெளியிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மணிந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா இன்றோடு பணி ஓய்வு பெற்றநிலையில், முன்னதாகவே உச்ச நீதிமன்ற கொலீஜியம் இவரது பெயரைப் பரிந்துரைத்திருந்தது.

இதுதொடர்பாக மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மெக்வால் வெளியிட்டுள்ளப் பதிவில், 

'இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, இந்தியத் தலைமை நீதிபதியுடன் கலந்தாலோசித்த பிறகு, இந்தியக் குடியரசுத் தலைவர், தற்போது கேரள உயர்நீதிமன்ற நீதிபதியாக உள்ள சுஷ்ருத் அரவிந்த் தர்மா அதிகாரியை, அவர் பொறுப்பேற்கும் தேதியிலிருந்து மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிப்பதில் மகிழ்ச்சி அடைகிறார். அவருக்கு எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்' என தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.  

யார் இவர்?

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த நீதிபதி தர்மாதிகாரி, ராய்ப்பூரைச் சேர்ந்தவர். நாக்பூர் பல்கலைக்கழகத்தில் வணிகம் மற்றும் சட்டத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். 1992 ஆம் ஆண்டு ஜபல்பூரில் உள்ள மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பயிற்சியைத் தொடங்கிய அவர், 2000 முதல் 2015 வரை சுமார் 15 ஆண்டுகள் மத்திய அரசின் வழக்கறிஞராகப் பணியாற்றினார். வருமான வரித் துறை, இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய கலால் துறை உள்ளிட்ட பல அரசு அமைப்புகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் மூத்த நிலை ஆலோசகராகவும் அவர் பணியாற்றியுள்ளார்.

கடந்த 2016ஆம் ஆண்டு அன்று மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2018-ல் அன்று நிரந்தர நீதிபதியாக உறுதிப்படுத்தப்பட்டார். கடந்தாண்டு கேரள உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். 

Tags:    

Similar News