தமிழ்நாடு செய்திகள்

தமிழ்நாட்டிலும் பீகார் ஃபார்முலா... தேர்தலுக்கு பின் காணாமல் போகும் அதிமுக - எச்சரிக்கும் வன்னி அரசு

Published On 2026-03-05 15:05 IST   |   Update On 2026-03-05 15:05:00 IST
  • பாஜகவின் ஆக்டோபஸ் கரங்கள் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளை பல துண்டுகளாக பிரித்தது.
  • பவார் குடும்பமும், கட்சியும் ஒன்றாக இணையும் தருணத்தில் மர்மமான முறையில் விமான விபத்தில் (?) இறந்தார் அஜித் பவார்.

பீகாரின் முதலமைச்சர் நிதிஷ் குமார் தற்போது மாநிலங்களவை சீட்டுக்காக தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யவுள்ளார். இதனைக் குறிப்பிட்டு பாஜக தமிழ்நாட்டிலும் இதே ஃபார்முலாவை முன்னெடுப்பதாகவும், அதிமுக ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் எனவும் விசிக துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

"பீகார் மாநிலத்தை பாஜக தமது சதியால் கைப்பற்றியுள்ளது. பீகார் மாநிலத்தின் உரிமைகளுக்காகவும், சமூகநீதி-இட ஒதுக்கீட்டு கொள்கை நாயகனாகவும் களமாடி வந்த நிதிஷ் குமார் பாஜகவோடு கூட்டணி வைத்ததிலிருந்தே தடுமாற ஆரம்பித்து விட்டார்.

தற்போது, முதலமைச்சர் பதவியை ராஜினமா செய்ய வைக்கப்பட்டதன் மூலம் நிதிஷ்குமாரை பாஜக மாநில அரசியலிலிருந்தே அப்புறப்படுத்தியுள்ளது. 243 இடங்கள் கொண்ட பீகார் சட்டப்பேரவையில் பெரும்பான்மைக்கு 122 இடங்கள் தேவை என்ற நிலையில், கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் 202 இடங்களை பிடித்து மீண்டும் ஆட்சிக்கு வந்தது தேசிய ஜனநாயக கூட்டணி.

2025 தேர்தலில் பீகார் முதலமைச்சரும், ஜனதா தள கட்சியின் தலைவருமான நிதிஷ் குமாரும் பாஜகவும் 101 இடங்கள் என்று சமமாக போட்டியிட்டன. இறுதியில் 89 இடங்களோடு முதல் இடத்தில் பாஜகவும், 85 இடங்களோடு இரண்டாமிடத்தில் ஜனதா தளமும் வெற்றி பெற்றது.

2005ல் வெறும் 37 இடங்களுடன்தான் பாஜக பீகார் அரசியலில் நுழைந்தது. நிதிஷ் குமாரின் ஜனதா தளம் எனும் மாநில கட்சியின் தயவுடன் உள்ளே நுழைந்த பாஜக இன்று அதே நிதிஷ் குமாரின் முதலமைச்சர் பதவியை பறித்து, மாநில அரசியலைவிட்டு வெளியேற்ற முனைந்துள்ளது. இதே நிலை தான் NDA என்ற சர்கஸ் கூடாரத்தில் பாஜக எனும் ரிங் மாஸ்டரின் கீழ் அடைப்படுள்ள கட்சிகளுக்கு சட்டப்பேரவை தேர்தலுக்கு பின்னர் வரும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.

மராட்டியத்திலும் பாஜகவின் ஆக்டோபஸ் கரங்கள் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளை பல துண்டுகளாக பிரித்தது. சிவசேனாவின் தோள்களில் 35 ஆண்டுகள் சவாரி செய்த பாஜக, இன்று தேர்தல் ஆணையத்தின் துணையுடன் அந்த கட்சியை துண்டாக்கியது. கட்சியை நிறுவிய தாக்கரே குடும்பத்திடமிருந்து சின்னத்தையும், கட்டமைப்பையும் பிடுங்கியது. கடந்த 30 ஆண்டுகளாக சிவசேனாவின் கைகளில் இருந்த மும்பை மாநகராட்சியும் இன்று பாஜக கைகளில் உள்ளது. தாங்கள் வளர்த்த பாஜகவிடமே இன்று கட்சியும் ஆட்சியும் இழந்து நிர்கதியாய் நிற்கிறார் உத்தவ் தாக்கரே.

பாஜக சதியால் பிரிந்த பவார் குடும்பமும், கட்சியும் ஒன்றாக இணையும் தருணத்தில் மர்மமான முறையில் விமான விபத்தில் (?) இறந்தார் அஜித் பவார். இப்படி தான் இந்தியா முழுக்க பாஜக தமது சதிவலையை விரித்து ஆட்சியை பிடித்து வருகிறது. தமிழ்நாட்டிலும் பீகார் பார்முலாவையே பாஜக முன்னெடுப்பதை அவதானிக்க முடிகிறது.

தேர்தலுக்கு பிறகு அதிமுக என்னும் மாநிலக்கட்சி இல்லாமல் போவதற்கே வாய்ப்புள்ளது. எடப்பாடி பழனிசாமி அப்போது என்ன புலம்பினாலும் அவரையும் அதிமுகவையும் காப்பாற்ற முடியாது. அதிமுக தொண்டர்கள் இந்த ஆபத்தை புரிந்து கொண்டால் நல்லது." எனக் குறிப்பிட்டுள்ளார். 

Tags:    

Similar News