தமிழ்நாடு செய்திகள்

வாடிப்பட்டி அருகே மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவன் உள்பட 2 பேர் பலி

Published On 2026-03-06 11:20 IST   |   Update On 2026-03-06 11:20:00 IST
  • காலை இருவரும் தங்களுக்கு சொந்தமான தோட்டத்தில் மாட்டு தீவனம் அறுத்துக் கொண்டிருந்தனர்.
  • ஆதிநாரயணன் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

வாடிப்பட்டி:

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே தெத்தூர் நாராயணபுரத்தைச் சேர்ந்தவர் ஆதிநாராயணன் (வயது 55). இவர் சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் அரசு பேருந்து ஓட்டுநராக பணி செய்து வந்தார். இவரது தம்பி மகன் ஸ்ரீ என்ற ஸ்ரீ கிருஷ்ணன் (20). இவர் மதுரை தனியார் கல்லூரியில் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

இந்நிலையில் இன்று காலை 7.45 மணிக்கு இருவரும் தங்களுக்கு சொந்தமான தோட்டத்தில் மாட்டு தீவனம் அறுத்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென காற்று அடித்து அங்கிருந்த மின்வயர் அறுந்து ஸ்ரீ கிருஷ்ணன் மீது விழுந்தது. இதில் அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்த ஆதி நாராயணன் மற்றும் அவரது தந்தை சின்னத்தம்பி (79) இருவரும் ஸ்ரீ கிருஷ்ணனை காப்பாற்ற முயற்சி செய்தனர்.

அப்போது இருவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் ஆதிநாரயணன் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். சின்னதம்பி பலத்த காயமடைந்தார். சம்பவம் குறித்து தகவல் அறிந்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பலத்த காயம் அடைந்த ஸ்ரீ கிருஷ்ணன், சின்ன தம்பி இருவரையும் வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தனர். அப்போது செல்லும் வழியிலேயே ஸ்ரீ கிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்தார். சின்னத்தம்பி மதுரை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்பட்டுள்ளது. 

Tags:    

Similar News