null
TN Assembly Election 2026: மெகா கூட்டணி.. 26 கட்சிகளின் பேராதரவுடன் களம் காணும் தி.மு.க.!
- 2016 தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் சில கட்சிகள் மட்டும் அங்கம் வகித்தது.
- காங்கிரசுக்கு திமுக, 28 சட்டமன்ற தொகுதியையும், ஒரு மாநிலங்களவை சீட்டையும் ஒதுக்கி உள்ளது.
தமிழ்நாட்டில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
திமுக கூட்டணி, அதிமுக - பாஜகவின் என்டிஏ கூட்டணி, புதுவரான விஜய்யின் தவெக, சீமானின் நாம் தமிழர் என அவரவர் அணியை தேர்தலை நோக்கி அனைவரும் தயார்படுத்தி வருகின்றனர்.
பாஜக, அதிமுக, அன்புமணி பாமக, டிடிவி தினகரனின் அமமுக, என்டிஏ கூட்டணியாக களம் காண உள்ள நிலையில் ஆட்சியில் உள்ள திமுக நடப்பு சட்டமன்றத் தேர்தலில் மெகா கூட்டணியை உருவாக்கி உள்ளது.
தற்போது திமுகவின் கூட்டணியில் 26 கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
2016 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட சில கட்சிகள் மட்டும் அங்கம் வகித்தது.
அந்த தேர்தலில் தே.மு.தி.க., ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், த.மா.கா. ஆகிய கட்சிகள் மக்கள் நலக்கூட்டணியை உருவாக்கி சந்தித்தது.
ஆனால் தேர்தல் முடிவு மக்கள் நலக்கூட்டணியை சிதறவிட்டது. இந்த கூட்டணியில் இருந்த ம.தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் 2021 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் கை கோர்த்தன.
2021 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. தற்போது மீண்டும் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தி.மு.க. மெகா கூட்டணியை உருவாக்கி உள்ளது.
இதில், காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, தே.மு.தி.க., ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம், லீக், மக்கள் நீதி மய்யம், மனிதநேய மக்கள் கட்சி, எஸ்.டி.பி.ஐ., கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, ஆம் ஆத்மி, தமிழக வாழ்வுரிமை கட்சி, மனிதநேய ஜனநாயக கட்சி, முக்குலத்தோர் புலிப்படை, சமத்துவ மக்கள் கழகம், மூவேந்தர் முன்னேற்ற கழகம், கொங்கு இளைஞர் பேரவை, வல்லரசு பார்வர்டு பிளாக், , ஆதி தமிழர் பேரவை, தமிழ் புலிகள் கட்சி, ஆதி தமிழர் கட்சி, புதிய திராவிடர் கழகம், தமிழர் தேசம் கட்சி, அகில இந்திய பசும்பொன் முன்னேற்ற கழகம், திராவிட தமிழர் கட்சி ஆகிய 26 கட்சிகள் இடம் பெற்றுள்ளன.
மேலும் பல அமைப்புகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றன. இந்த 26 கட்சிகளில் 16 கட்சிகளுக்கு தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை தி.மு.க. வழங்கும் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே கூட்டணியில் இடம்பெற்ற தேசிய கட்சியான காங்கிரசுக்கு திமுக, 28 சட்டமன்ற தொகுதியையும், ஒரு மாநிலங்களவை சீட்டையும் ஒதுக்கி உள்ளது.
தேமுதிக, விசிக, கம்யூனிஸ்ட், மதிமுக என கூட்டணியில் இடம்பெற்ற மற்ற பிரதான கட்சிகளுக்கு திமுக அடுத்தடுத்து எத்தனை சீட் என்று உறுதி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே பாமக நிறுவனர் ராமதாஸ் தனி அணியாக செயல்பட்டு வரும் நிலையில் அவர் திமுகவுக்கு ஆதரவு தெரிவிப்பாரா அல்லது தேர்தலை புறக்கணிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அன்புமணி பாமக. என்டிஏ கூட்டணியில் இடம்பெற்றுள்ளதால் அந்த பக்கம் ராம்தாஸ் செல்ல வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.
மறுபுறம் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா புதிய கட்சியை தொடங்கி உள்ளார். கருப்பு, வெள்ளை, சிவப்பு வண்ணத்தில் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் உருவத்துடனான கட்சிக்கொடியை அறிமுகம் செய்த அவர் விரைவில் கட்சி பெயரை அறிவிப்பதாக கூறியுள்ளார்.
இதற்கு மத்தியில் அதிமுக விஸ்வாசியாக ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு பாத்திரமாக விளங்கிய முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம், அதிமுக ஏற்க மறுத்த நிலையில் திமுகவில் ஐக்கியமாகி உள்ளார். மொத்தத்தில் தமிழக தேர்தல் களம் எப்போதும் எக்கச்சக்க ட்விஸ்ட்களை சந்தித்து வருகிறது.
எல்லாவற்றையும் தாண்டி இந்த தேர்தலில் புதுவரவு விஜய் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று அரசியல் வட்டாரங்களிலும், மக்கள் மத்தியிலும் சிறப்பு கவனம் இருந்து வருகிறது.