திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிமன்ற உத்தரவில் எந்த தவறும் இல்லை: அண்ணாமலை
- தீபத்தூண் என்பது கோவில் சொத்து என்பது ஊர்ஜிதமாகியுள்ளது.
- இதுதொடர்பாக உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு அறிக்கை அனுப்பியுள்ளோம்.
சென்னை:
தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் மத மோதலில் ஏற்படுத்தும் முயற்சியில் தி.மு.க. அரசு இறங்கியுள்ளது.
ஐகோர்ட் தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அளித்த தீர்ப்பு குறித்து தமிழக அமைச்சர் ரகுபதி வேண்டும் என்றே பொய் சொல்லியுள்ளார். நீதிபதி தவறான தீர்ப்பு கொடுத்துள்ளார் என ரகுபதி தவறான வாதத்தைவைக்கிறார்.
தீபத்தூண் என்பது கோவில் சொத்து என்பது ஊர்ஜிதமாகியுள்ளது. இதனை எதிர்த்து செயல் அலுவலர் ஏன் மேல்முறையீடு செய்ய வேண்டும். அதுவும் சரியாக செய்யவில்லை. செயல் அலுவலரை திமுக அரசு தூண்டிவிட்டு மேல்முறையீடு செய்ய வைத்துள்ளது.
திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது மோசடி என நீதிபதிகள் அமர்வு கண்டுபிடித்தனர். திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிமன்ற உத்தரவில் எந்த தவறும் இல்லை.
நீதிபதி தீர்ப்புக்கு எதிராக சட்டவிரோதமாக மோதல் போக்கை தி.மு.க. அரசு கடைபிடித்துள்ளது. ஒரு தலைபட்சமாக இந்து மதத்தை நம்பும் பக்தர்களுக்கு எதிராக உச்சபட்சமாக திருப்திப்படுத்தும் அரசியலை தி.மு.க. செய்கிறது. சட்டத்தைப் பாதுகாக்க வேண்டிய சட்டத்துறை அமைச்சர் பழைய தீர்ப்புகளை திரித்து பேசுகிறார் என தெரிவித்துள்ளார்.