'நேரம் வரும்பொழுது பாஜகவை பார்த்துக் கொள்ளலாம் என விஜய் தெரிவித்தார்' - தவெக நிர்வாகி நாஞ்சில் சம்பத்!
- கொள்கை எதிரி என பாஜகவை கூறியதில் இருந்து விஜய் பின்வாங்கவில்லை.
- மல்லை சத்யா அழைத்தார். நான்தான் திராவிட வெற்றிக் கழகத்தில் இணையவில்லை.
தவெக தலைவர் விஜய் பாஜகவை கொள்கை எதிரி எனக் கூறினாலும், திமுகவை விமர்சனம் செய்யும் அளவிற்கு அவர்களை விமர்சனம் செய்வது இல்லை. மேலும் பாஜகவின் கூட்டணியில் இருக்கும் அதிமுகவையும் அந்தளவு விமர்சித்ததில்லை எனவும் நீண்ட நாட்களாகவே ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகிறது.
மேலும் விஜய், பாஜகவின் 'சி' டீம் எனவும் திமுகவால் விமர்சிக்கப்பட்டு வருகிறார். மௌனம் பாஜகவின் ஆதரவு மனநிலை என்று எடுத்துக்கொள்ளலாமா எனவும் பலநாட்களாக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், அதன் ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் இதற்கான விளக்கத்தை இன்று தன் கட்சியில் இணைந்த புதிய நிர்வாகி நாஞ்சில் சம்பத்திடம் பகிர்ந்துள்ளார் அக்கட்சியின் தலைவர் விஜய். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய நாஞ்சில் சம்பத்,
"கொள்கை எதிரி என பாஜகவை கூறியதில் இருந்து அவர் பின்வாங்கவில்லை. பாஜக ஆதரவு தொடர்பான விமர்சனங்கள் குறித்து விஜய்யிடம் பேசினேன். அதற்கு, "அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. அதிகாரத்தில் இருக்கும் கட்சி. தேர்தல் இங்கு நடக்கப்போகிறது. அதனால் திமுகவை கூர்மையாக விமர்சிக்கிறேன். பாஜகவிற்கு நேரம் வரும்பொழுது பார்த்துக் கொள்ளலாம்" என தெரிவித்தார்.
மல்லை சத்யா அழைத்தார். நான்தான் திராவிட வெற்றிக் கழகத்தில் இணையவில்லை. அதற்கு தனிப்பட்ட காரணங்கள் இருக்கிறது. திமுகவில்தான் ஆயுள் முழுவதும் பணியாற்ற வேண்டும் என நினைத்தேன். ஆனால் வைகோ வெளியேறியதால் வெளியேறினேன். அவர்கள் என்னை நீக்கவில்லை. நான் பிரச்சாரம் செய்தே வாழ்ந்தவன் என்பதால், அந்த வாய்ப்பை விஜய்யிடம் கேட்டுள்ளேன். திமுகவையும், பாஜகவையும் ஒரேநேரத்தில் எதிர்க்கும் துணிச்சலையே நான் பாராட்டுகிறேன். எதிர்ப்பவர் ஏன் கேள்வி கேட்கவில்லை என்பதை அவரிடம்தான் கேட்கவேண்டும்." என தெரிவித்தார்.