விவசாயிகள் பிரச்சனை குறித்து பேச அனுமதி மறுப்பு - சட்டசபையில் இருந்து அ.தி.மு.க. வெளிநடப்பு
- இ.பி.எஸ். எழுப்பிய பிரச்சனை குறித்து தொடர்புடைய அமைச்சர் நாளை பதில் அளிப்பார் என்று கூறினார்.
- சபாநாயகர் அறிவுறுத்தியபோதும், ஏற்க மறுத்து அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
சட்டசபை கூட்டத்தொடரின் 3-வது நாள் அமர்வு இன்று காலை தொடங்கியது. வினாக்கள்-விடைகள் நேரத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர்.
சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில்,
அவையில் எதிர்க்கட்சி தலைவருக்கு பேச அனுமதி மறுக்கப்படுகிறது. விவசாயிகள் தொடர்பான முக்கிய பிரச்சனைகளை சட்டசபையில் பேச அனுமதிக்க வேண்டும் என்று கூறினார்.
எடப்பாடி பழனிசாமி பிரச்சனை எழுப்பிய நிலையில் அதற்கு பதில் அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விவசாயிகள் சம்பந்தப்பட்ட பிரச்சனையை நாளை பேசலாம். இ.பி.எஸ். எழுப்பிய பிரச்சனை குறித்து தொடர்புடைய அமைச்சர் நாளை பதில் அளிப்பார் என்று கூறினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலை ஏற்க மறுத்து அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். முதலமைச்சரின் பதிலில் திருப்தி இல்லை எனக்கூறி அவர்கள் கடும் கூச்சலிட்டனர்.
சபாநாயகர் அறிவுறுத்தியபோதும், ஏற்க மறுத்து அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
இதையடுத்து சட்டசபையில் இருந்து அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.