பியூஸ் கோயலுடன் முக்கிய ஆலோசனை: எடப்பாடி பழனிசாமியின் விருந்தும்... வியூகமும்...
- தி.மு.க. அரசுக்கு எதிரான பிரசாரங்களை முன்னெடுப்பது குறித்தும் கருத்துக்கள் பரிமாறப்பட்டு உள்ளன.
- அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியில் தே.மு.தி.க.வையும் சேர்ப்பதற்கு தீவிர பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று பா.ஜ.க. தலைவர்களுக்கு விருந்து அளித்து தேர்தல் வியூகம் குறித்து முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
இவை பற்றிய பரபரப்பான தகவல்கள் வருமாறு:-
பா.ஜ.க. வருகிற சட்டமன்ற தேர்தலில் 30 தொகுதிகள் வரையில் போட்டியிடுவதற்கு விருப்பம் தெரிவித்து உள்ளது.
ஆனால் எடப்பாடி பழனிசாமி பா.ஜ.க.வுக்கு 25 தொகுதிகள் ஒதுக்குவதற்கு சம்மதித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அ.ம.மு.க.வுக்கு 6 அல்லது 7 தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அன்புமணி தலைமையிலான பா.ம.க.வுக்கு 17 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. அத்துடன் அன்புமணிக்கு மேல்சபை எம்.பி. பதவி அளிக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.
எடப்பாடி பழனிசாமி, பியூஸ் கோயல் இடையேயான இந்த சந்திப்பின் போது தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை அனைத்து கூட்டணி கட்சிகளோடும் இணைந்து ஒற்றுமையுடன் சந்திப்பது பற்றி விரிவாக ஆலோசிக்கப்பட்டது. பிரதமர் மோடி நாளை சென்னை வரும் நிலையில் அந்த கூட்டத்தில் கலந்து கொள்வது குறித்தும் எடப்பாடி பழனிசாமியுடன் பா.ஜ.க. தலைவர்கள் ஆலோசனை மேற்கொண்டனர்.
சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. அரசுக்கு எதிராக வியூகம் அமைத்து செயல்படுவது பற்றியும் இன்றைய சந்திப்பின் போது எடப்பாடி பழனிசாமி, பியூஸ் கோயல் இருவரும் ஆலோசனை நடத்தி உள்ளனர். இதன்படி தேர்தல் அறிவிப்பு வெளியான பிறகு கூட்டணி கட்சி தலைவர்களோடு இணைந்து பொதுக் கூட்டங்கள் நடத்துவது பற்றியும் அதில் தி.மு.க. அரசுக்கு எதிரான பிரசாரங்களை முன்னெடுப்பது குறித்தும் கருத்துக்கள் பரிமாறப்பட்டு உள்ளன.
பிரதமர் மோடி நாளை சென்னை வரும் நிலையில் கடந்த 2 நாட்களாக சென்னையில் பியூஸ் கோயல் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து பேசி இருப்பது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அ.தி.மு.க. கூட்டணியில் கடந்த மாதம் வரையில் பா.ஜ.க. கட்சி மட்டுமே இடம் பெற்றிருந்த நிலையில் புத்தாண்டு பிறந்த பிறகு அந்த கூட்டணியில் அதிரடி திருப்பமாக அன்புமணி தலைமையிலான பா.ம.க.வும், டி.டி.வி.தினகரன் தலைமையிலான அ.ம.மு.க.வும் சேர்ந்து இருப்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் அ.தி.மு.க.-பா.ஜ.க., பா.ம.க., அ.ம.மு.க. ஆகிய கட்சிகளின் தொண்டர்களும், கூட்டணியில் இடம் பெற்றுள்ள மற்ற சிறிய கட்சிகளின் தொண்டர்களும் உற்சாகம் அடைந்து இருப்பதாக அ.தி.மு.க. மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறும் போது, வருகிற சட்டமன்ற தேர்தலை மெகா கூட்டணி அமைத்து சந்திப்போம் என்று எங்களது கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து கூறி வந்தார். அப்போது எல்லாம் எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் ஏளனம் செய்தார்கள். அவர்களது வாயை எல்லாம் அடைக்கும் வகையில் அ.தி.மு.க. கூட்டணி மெகா கூட்டணியாக மாறி இருக்கிறது. இதே வேகத்தோடு சென்று நிச்சயம் வருகிற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம் என்றும் தெரிவித்தார்.
அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியில் தே.மு.தி.க.வையும் சேர்ப்பதற்கு தீவிர பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இதன் மூலம் தே.மு.தி.க.வும் விரைவில் அ.தி.மு.க. கூட்டணியில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படி கூட்டணி இறுதி செய்யப்பட்டதும் கூட்டணி கட்சிகள் அனைத்திற்கும் தொகுதிகளை பங்கீடு செய்து கொடுத்து விட்டு அ.தி.மு.க. 170 தொகுதிகளில் களம் இறங்க திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி தமிழகத்தில் தீவிர தேர்தல் பணிகளை மேற்கொண்டு உள்ளது. இதன் மூலம் தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.