தமிழ்நாடு செய்திகள்

அடுத்த மாதம் திறக்க முடிவு: மத்திய கைலாஷ் மேம்பாலம் இறுதிக்கட்டப் பணிகள் தீவிரம்

Published On 2026-01-22 13:32 IST   |   Update On 2026-01-22 13:32:00 IST
  • பிப்ரவரி முதல் வாரத்தில் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.
  • 35 மீட்டர் நீளமுள்ள இறுதி டெக்ஸ்லாப் பாக்ஸ் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

சென்னை:

சென்னையில் மத்திய கைலாஷ் சந்திப்பு போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக காணப்படுகிறது. அங்கு ஒரு மணி நேரத்திற்கு சுமார் 11 ஆயிரம் வாகனங்கள் கடந்து செல்வதாக கணக்கிடப்பட்டுள்ளது.

கிண்டியில் இருந்து ஓஎம்ஆர் வரை வழித்தடத்தில் மட்டும் 3762 வாகனங்கள் செல்கின்றன. இதனால் ஏற்படுகின்ற போக்குவரத்து நெரிசலை குறைக்க 650 மீட்டர் நீளமுள்ள எல் வடிவிலான மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது.

பருவமழை மற்றும் இரும்பு கொள்முதலில் ஏற்பட்ட தாமதத்தின் காரணமாக கட்டுமான பணியில் சுணக்கம் ஏற்பட்டது. தற்போது இறுதி கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

மேம்பாலத்தின் மத்திய பகுதியில் ஒரு தளம் அமைக்கப்பட்டு பணிக்கான இடம் சீர் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக போக்குவரத்து போலீசார் தற்போது அடையாரில் இருந்து கிண்டிக்குச் செல்லும் வாகனங்களை சர்தார் படேல் சாலை வழியாக நேராக செல்ல அனுமதிக்க உள்ளனர்.

சர்தார் படேல் சாலையை ராஜீவ் காந்தி சாலையுடன் இணைக்கும் எல் வடிவ மேம்பாலத்தின் கட்டுமான பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன. பிப்ரவரி முதல் வாரத்தில் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. 35 மீட்டர் நீளமுள்ள இறுதி டெக்ஸ்லாப் பாக்ஸ் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த மேம்பாலம் திறக்கப்பட்டால் ஐ.ஐ.டி, அடையார் புற்றுநோய் நிறுவனம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் கணிசமாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடையாறில் இருந்து துரைப்பாக்கம் நோக்கி பயணிக்கும் வாகனங்களுக்கு டைடல் பார்க் சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்க கூடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

சர்தார் படேல் சாலையில் இருந்து ராஜீவ் காந்தி சாலைக்கு, நெரிசலான மத்திய கைலாச சந்திப்பை தவிர்த்து தடையில்லாமல் செல்ல அனுமதிக்கும் வகையில் ஒருங்கிணைந்த மூன்று வழி மேம்பாலம் கட்ட கையெழுத்திடப்பட்டுள்ளது. திறப்பு விழாவை தொடர்ந்து சர்தார் படேல் சாலை, காந்தி மண்டபம் சாலை, ராஜீவ் காந்தி சாலை ஆகிய மூன்று சாலைகளிலும் போக்குவரத்து நெரிசலை குறைக்க சுழற்சி முறையில் மாற்றங்களை செய்ய மாநில நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்து போலீசார் திட்டமிட்டுள்ளன.

புதிய மேம்பாலம் திறக்கப்பட்டதும், காந்தி மண்டபம் சாலையிலிருந்து (கோட்டூர்புரம்) கிண்டி நோக்கி செல்லும் வாகனங்கள் புதிய மேம்பாலத்தின் கீழ் யு வடிவ திருப்பம் செய்து இடது புறமாக திருப்பி விடப்படும்.

அடையாறு, திருவான்மியூரில் இருந்து கோட்டூர்புரம் நோக்கி செல்லும் வாகனங்கள் அடையாறு மேம்பாலத்திற்கு முன்னால் சிக்னல் இல்லாத வலது புறம் திரும்பும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தற்போது சர்தார் படேல் சாலையில் இருந்து (அண்ணா பல்கலைக்கழகம் பக்கம்) கோட்டூர்புரம் நோக்கி செல்லும் வாகனங்கள் அடையாறு மற்றும் திருவான்மியூர் நோக்கி செல்லும் வாகனங்கள் அடையாறு மேம்பாலத்தை பயன்படுத்த வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த மேம்பாலம் 652 மீட்டர் நீளமும் 7.5 மீட்டர் அகலமும் கொண்டது. புதிய மேம்பாலத்தில் போக்குவரத்து தொடங்கிய பிறகு மாற்றங்கள் கொண்டு வரப்படுகிறது.

சர்தார் படேல் சாலையில் இருந்த நடைபாதை அளவு குறைக்கப்பட்டு உள்ளது. அந்த சாலை அகலப்படுத்த பணிகள் நடந்து வருகின்றன. சர்தார் படேல் சாலை அகலப்படுத்தும் திட்டத்திற்காக மாநில நெடுஞ்சாலைத்துறை விரைவில் டெண்டர் வெளியிட உள்ளது.

பல லட்சம் ஊழியர்கள் பயணம் செய்யும் இந்த சாலையின் மேம்பாட்டிற்கு ரூ.45 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இரு கூடுதல் பாதைகள் அமைத்தல், பாதசாரிகளுக்கான நடைபாதை மேம்படுத்துதல் மற்றும் ஐ.ஐ.டி.க்கு அருகில் உள்ள புற்றுநோய் மையத்தை சுற்றி ஒலி தடுப்பு சுவர் கட்டுதல் ஆகியவை திட்டத்தின் முக்கிய அம்சங்கள் ஆகும்.

புதிய மேம்பாலம் கட்டப்பட உள்ளதால் அதன் கீழ் உள்ள சாலை சுமார் 400 மீட்டர் தூரத்திற்கு ஏற்கனவே அகலப்படுத்தப்பட்டுள்ளது. ஐ.ஐ.டி முதல் அண்ணாசாலை வரையிலான பகுதி விரிவுபடுத்தப்பட்டு அதிக வாகனங்கள் செல்ல அனுமதிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தத் திட்டப் பணிகள் இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்படும் முதல் கட்டமாக ஐ.ஐ.டி. முதல் ராஜ்பவன் வரையிலான 1.70 கிலோ மீட்டர் தூர பணிகள் தொடங்கும். அதனை தொடர்ந்து ராஜ் பவன் முதல் அண்ணா சாலை வரையிலான 0.80 இரண்டாம் கட்ட பணிகள் மேற்கொள்ளப்படும்.

புதிய மேம்பாலம் திறக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் நிலையில் நீண்டகால போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு ஏற்படும். 

Tags:    

Similar News