தமிழ்நாடு செய்திகள்

தமிழ்நாட்டில் மதக்கலவரத்தை நிகழ்த்திவிட வேண்டுமென்கிற முனைப்போடு செயல்படுகிறது பா.ஜ.க- பா.ரஞ்சித்

Published On 2025-12-05 16:24 IST   |   Update On 2025-12-05 16:24:00 IST
வன்முறையை தூண்டும் வகையில் செயல்படுவோரை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பன்முகத்தன்மையை சிதைத்து வன்முறையை தூண்டும் வகையில் பேசுவோரை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என இயக்குனர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், வன்முறையை தூண்டும் வகையில் செயல்படுவோரை கண்காணித்து நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு இயக்குநர் பா.ரஞ்சித் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து பா.ரஞ்சித் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:-

சமூக நல்லிணக்கத்தைத் துண்டாடி அதன் மீதிருந்து அரசியல் செய்வது பாரதிய ஜனதா காலங்காலமாகச் செய்யக்கூடிய அரசியல். இன்று அந்த மத அரசியலை கையிலெடுத்து, தமிழ்நாட்டில் கலவரத்தை நிகழ்த்திவிட வேண்டுமென்கிற முனைப்போடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாகப் பல்வேறு வழக்குகளை நீதிமன்றங்கள் சந்தித்து, அதற்கான தெளிவான வழிகாட்டுதல்களையும் வழங்கியிருக்கிறது.

அதன்படியே மக்களிடையே சுமூகமான நல்லிணக்கம் பேணப்பட்டு வந்த நிலையில், ஏற்கெனவே முடித்து வைக்கப்பட்ட வழக்கில் புதிய குழப்பங்களை உருவாக்கி, தமிழ்நாட்டில் மதவாத அரசியலை துவங்குவதற்கான வாய்ய்ப்பாக பாரதிய ஜனதாவும் அதன் சங் பரிவார் அமைப்புகளும் கடந்த ஓராண்டாக இதைக் கையிலெடுத்திருக்கிறார்கள்.

தர்காவை அப்புறப்படுத்த வேண்டும், தமிழ்நாடு அயோத்தியாக மாற வேண்டுமென பாரதிய ஜனதாவை சேர்ந்த தலைவர்களும் இந்துத்துவவாதிகளும் வெளிப்படையாகவே பேசி வருகிறார்கள்.

மேலும், சமூக நல்லிணக்கம் சிதையும் அபாயம் உள்ள இத்தகைய வழக்குகளில் இந்தப் பின்னணியை மனதில் வைத்தே நீதிமன்றங்கள் செயல்பட வேண்டும்.

பன்முகத்தன்மையைச் சிதைத்து, சிறுபான்மை சமூகங்கள் மீது குறி வைத்துத் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் பாரதிய ஜனதா மற்றும் அதன் சங் பரிவார அமைப்புகளைக் கடுமையாக எச்சரிப்பதோடு, வன்முறையைத் தூண்டும் விதமாகப் பேசுபவர்கள், செயல்படுகிறவர்களைக் கண்காணித்து சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென நீலம் பண்பாட்டு மையம் தமிழக அரசைக் கோருகிறது.

இவ்வாறு அவர் கூறப்பட்டுள்ளார்.

Tags:    

Similar News