செய்திகள்
மழை

தொடர் மழையால் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது

Published On 2021-09-05 08:12 GMT   |   Update On 2021-09-05 08:12 GMT
கொடைக்கானலில் தொடர் மழையால் வெள்ளி நீர் வீழ்ச்சி, வட்டக்கானல், பாம்பார் அருவி ஆகியவற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

கொடைக்கானல்:

மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் அனைத்து சுற்றுலா தலங்களும் தற்போது திறக்கப்பட்டுள்ளன.

பிரையண்ட் பூங்கா, கோக்கர்ஸ் வாக், பசுமை பள்ளத்தாக்கு, பைன் பாரஸ்ட், குணாகுகை, மோயர் பாயிண்ட் உள்ளிட்ட இடங்களில் நீண்ட நாட்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் வரத் தொடங்கினர்.

இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த 1 வாரமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. 3 நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. கொடைக்கானலில் தொடர் மழையால் வெள்ளி நீர் வீழ்ச்சி, வட்டக்கானல், பாம்பார் அருவி ஆகியவற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

எங்கும் பச்சை பசேல் என கண்ணைக் கவரும் வண்ணம் உள்ளது. மேலும் மரங்கள், மின் கம்பங்கள் முறிந்து விழுந்ததால் நேற்று போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தமிழகத்தின் பிற பகுதிகளில் மழை பெய்து வருவதால் வார இறுதி நாட்களில் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. சாரல் மழையில் நனைந்தவாறு இயற்கை அழகை கண்டு ரசித்தனர்.

ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த சில நாட்களாக சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததால் வியாபாரிகள் நிம்மதியடைந்தனர். தற்போது மீண்டும் மழையால் அவர்களின் வாழ்வதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News