search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tourists"

    • அடிக்கடி தீ விபத்து ஏற்பட்டு வருவது பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளிடையே பீதியை கிளப்பியுள்ளது.
    • வனத்துறையினர் இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் மலைப்பகுதியில் நிலவி வரும் கடும் வெப்பம் காரணமாக புல்வெளிகள், செடி-கொடிகள் காய்ந்து காணப்படுகிறது. மேலும் அடிக்கடி தீ விபத்து ஏற்பட்டு வருவது பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளிடையே பீதியை கிளப்பியுள்ளது.

    பெரும்பள்ளம் வனப்பகுதி, குறிஞ்சி நகர், பழனி மலைச்சாலை உள்ளிட்ட பல இடங்களில் காட்டுத்தீ பற்றி அரிய வகை மரங்கள், மூலிகைச் செடிகள் எரிந்து நாசமாகின. இந்நிலையில் மச்சூர் வனப்பகுதியில் பற்றிய காட்டுத் தீ வேகமாக பரவி பல ஏக்கர் பரப்பிலான மரங்கள் மற்றும் செடிகளை நாசம் செய்தது.

    இது குறித்து அறிந்ததும் 30க்கும் மேற்பட்ட வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று காட்டுத்தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து அப்பகுதியில் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. தற்போது வெப்ப தாக்கத்தின் காரணமாக அடிக்கடி காட்டுத் தீ பற்றி வருகிறது.

    அன்றாட நிகழ்வு போல் தொடர்ந்து காட்டுத் தீ ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். மலைப்பகுதியில் காட்டுத்தீயை அணைக்க ஹெலிகாப்டர் மற்றும் நவீன உபகரணங்களை பயன்படுத்த வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் காட்டுத்தீ தொடர்ந்து பற்றி எரிந்து வருகிறது. வனப்பகுதியில் உள்ள வன விலங்குகள், பறவை இனங்கள் வெளியேறும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே வனத்துறையினர் இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • வருகிற 29-ந்தேதி முதல் ஜூலை 1-ந்தேதி வரை சிறப்பு மலை ரெயில்கள் இயக்கப்படுகிறது.
    • ஊட்டி-குன்னூர் இடையே மாலை 4.45 மணிக்கும் சிறப்பு மலை ரெயில்கள் இயக்கப்படும்.

    மேட்டுப்பாளையம்:

    தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் கோடைக்காலம் தொடங்கி உள்ளதால் அந்தந்த பகுதிகளில் வசிக்கும் பொது மக்கள் இதமான சீதோஷ்ண காலநிலை நிலவும் ஊட்டிக்கு சுற்றுலா செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு தினமும் மலைரெயில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் சுற்றுலாப் பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு மேலும் கூடுதலாக மலை ரெயில்களை இயக்குவதென தென்னக ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்து உள்ளது. அந்தவகையில் வருகிற 29-ந்தேதி முதல் ஜூலை 1-ந்தேதி வரை வாரந்தோறும் வெள்ளி முதல் திங்கட்கிழமை வரை 4 நாட்களுக்கு சிறப்பு மலை ரெயில்கள் இயக்கப்படுகிறது. அந்த நாட்களில் குன்னூர்-ஊட்டி இடையே காலை 8.20 மணிக்கும், ஊட்டி-குன்னூர் இடையே மாலை 4.45 மணிக்கும் சிறப்பு மலை ரெயில்கள் இயக்கப்படும்.

    இதுதவிர மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் காலை 9.10 மணிக்கு சிறப்பு மலை ரெயில் இயக்கப்படும். மேலும் ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11.25 மணிக்கு இயக்கப்பட உள்ளது. இதே போல ஊட்டி-கேத்தி இடையே வெள்ளி முதல் திங்கள் வரை 4 நாட்களுக்கு காலை 9.45 மணி, காலை 11.30 மணி, மாலை 3 மணி என்ற இடைவெளிகளில் சிறப்பு மலைரெயில்கள் இயக்கப்படும்.

    ஊட்டி-குன்னூர் இடையேயான மலை ரெயிலில் உள்ள 5 பெட்டிகளில் 80 முதல் வகுப்பு, 130 இரண்டாம் வகுப்பு என மொத்தம் 210 இருக்கைகள் அமையும். மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரையிலான 4 ரெயில் பெட்டிகளில் 40 முதல் வகுப்பு, 92 இரண்டாம் வகுப்பு என மொத்தம் 132 இருக்கைகள் இடம்பெற்றிருக்குமென தென்னக ரெயில்வே நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

    • தொலைநோக்கிகள் மூலம் அவர்கள் ஒட்டுமொத்த நீலகிரியின் பேரழகை கண்குளிர கண்டு ரசித்து வருகின்றனர்.
    • பல்வேறு நிறங்களில் பூத்து குலுங்கும் மலர்ச்செடிகளின் முன்பாக சுற்றுலா பயணிகள் நின்று செல்பி எடுப்பதை பார்க்க முடிகிறது.

    ஊட்டி:

    தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் கோடைக்காலம் தொடங்கி நடைபெற்று வருவதால் பல்வேறு இடங்களில் அனல்வெயில் கொளுத்தி வருகிறது.

    இதன்காரணமாக மலைப்பிரதேசங்களான ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற இடங்களுக்கு சுற்றுலாபயணிகள் படையெடுக்கத் தொடங்கிவிட்டனர்.

    மலைகளின் ராணி என அழைக்கப்படும் ஊட்டிக்கு ஆண்டுதோறும் மக்கள் வருகை இருக்கும். இருந்தாலும் கோடை காலத்தில் அங்கு மக்கள் அதிகம் கூடுவர்.

    தற்போது ஊட்டிக்கு வரும் சுற்றுலாபயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    ஊட்டி தாவரவியல் பூங்காவில் கோடைசீசனை முன்னிட்டு எண்ணற்ற மலர் நாற்றுகள் நடவுசெய்யப்பட்டு அங்கு தற்போது மலர்கள் பூத்து குலுங்குவது சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. மேலும் அவர்கள் பூங்காவின் மலர் மாடங்களில் அலங்கரித்து வைக்கப்பட்டு உள்ள மலர்களை கண்டு ரசித்து வருகின்றனர். அங்கு பல்வேறு நிறங்களில் பூத்து குலுங்கும் மலர்ச்செடிகளின் முன்பாக சுற்றுலா பயணிகள் நின்று செல்பி எடுப்பதை பார்க்க முடிகிறது.

    ஊட்டி படகு குழாம் இல்லத்திலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலை மோதி வருகிறது. அங்கு அவர்கள் நீண்டவரிசையில் நின்று டிக்கெட் எடுத்துக் கொண்டு, ஊட்டி ஏரியில் உள்ள மிதிபடகு, எந்திர படகு ஆகியவற்றின் மூலம் சவாரிசெய்து, ஏரியின் சுற்றுப்புற பகுதிகளில் இடம்பெற்று உள்ள இய ற்கை காட்சிகளை கண்டு ரசித்தனர்.

    இதுதவிர தொட்டப்பெட்டா காட்சிமுனையம், லேம்ஸ்ராக் காட்சிமுனை, டால்பின்நோஸ் மற்றும் கோத்தகிரி காட்சிமுனையம் ஆகிய சுற்றுலா பிரதேசங்களிலும் திரளான சுற்றுலாப் பயணிகளை பார்க்க முடிந்தது. அங்கு அமைக்கப்பட்டு உள்ள தொலைநோக்கிகள் மூலம் அவர்கள் ஒட்டுமொத்த நீலகிரியின் பேரழகை கண்குளிர கண்டு ரசித்து வருகின்றனர்.

    குன்னூர் சிம்ஸ் பூங்கா மற்றும் காட்டேரி பூங்கா ஆகிய பகுதிகளில் கோடை சீசனை முன்னிட்டு அங்குள்ள மலர் மாடங்களில் அலங்கரித்து வைப்பதற்காக சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளது.

    தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சுற்றுலா வாகனங்கள் மூலம் நீலகிரி மாவட்டத்துக்கு வந்த வண்ணம் இருப்பதால் அங்குள்ள கக்கநல்லா உள்ளிட்ட முக்கிய சோதனைச்சாவடிகளில் 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்றுவந்த வண்ணம் உள்ளன.

    • விவேகானந்தர் மண்டபம் செல்ல படகுத்துறையில் 2 மணி நேரம் காத்திருந்தனர்.
    • குறிப்பாக கேரளா மற்றும் வட மாநில சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.

    கன்னியாகுமரி:

    சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

    சபரிமலை சீசன் முடிந்த நிலையில் சுற்றுலா பயணிகளின் வருகை நாளுக்கு நாள் குறைந்த வண்ணமாக இருந்தது. இருப்பினும் வாரத்தின் கடைசி நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிக அளவில் காணப்படுகிறது.

    இந்த நிலையில் வார இறுதி விடுமுறை நாளான இன்று (ஞாயிற்றுகிழமை) கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிமாக இருந்தது. குறிப்பாக கேரளா மற்றும் வட மாநில சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.

    கன்னியாகுமரி கடலில் சூரியன் உதயமாகும் காட்சியை முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியிலும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு கிழக்கு பக்கம் உள்ள கிழக்கு வாசல் கடற்கரை பகுதியில் நின்று சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர்.

    கடல் நடுவில் அமைந்து உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்ப்பதற்காக அதிகாலையிலேயே படகுத்துறையில் சுற்றுலா பயணிகள் வந்து காத்து இருந்தனர். காலை 8 மணிக்கு படகுபோக்குவரத்து தொடங்கியது.

    சுமார் 2மணி நேரம் படகு துறையில் சுற்றுலா பயணிகள் காத்திருந்து படகில் பயணம் செய்து விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட்டு விட்டு திரும்பினர்.

    மேலும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், திருப்பதி வெங்கடாஜலபதி கோவில், கொட்டாரம் ராமர் கோவில், சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில், விவேகானந்த கேந்திர வளாகத்தில் அமைந்துஉள்ள பாரத மாதா கோவில், ராமாயண தரிசன சித்திர கண்காட்சி கூடம், காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், அரசு அருங்காட்சியகம், கலங்கரை விளக்கம், மீன்காட்சி சாலை, அரசு பழத்தோட்டம் சுற்றுச்சூழல் பூங்கா வட்டக்கோட்டை பீச் உள்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. சுற்றுலா பயணிகள் வருகை "திடீர்"என்று அதிகரித்ததால் கடற்கரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுஇருந்தது. கடலோர பாதுகாப்பு குழுமபோலீசார், சுற்றுலா போலீசார் மற்றும் உள்ளூர் போலீசார் இந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    • பஸ்சின் முன் பக்கவாட்டு கண்ணாடி உடைந்து சேதம் அடைந்தது.
    • சற்றும் எதிர் பாராத டிரைவர் சுதாரித்துக்கொண்டு பஸ்சை நிறுத்தினார்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்தின் வழியாக உடுமலையில் இருந்து கேரள மாநிலம் மூணார் செல்வதற்கு சாலை அமைக்கப்பட்டு உள்ளது. இதன் வழியாக நாள்தோறும் வாகன மற்றும் சரக்கு போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திருப்பூரில் இருந்து உடுமலை வழியாக அரசு பஸ் ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு மூணாருக்கு சென்றது.

    பின்னர் அங்கு பயணிகளை இறக்கி விட்டு விட்டு இரவு மூணாறில் இருந்து அந்த பஸ் புறப்பட்டு உடுமலை நோக்கி வந்து கொண்டிருந்தது. தலையார் அருகே வந்த போது உடுமலை-மூணார் சாலையில் ஆக்ரோசத்துடன் சுற்றித்திரிந்த ஒற்றை யானை அந்த பஸ்சை வழிமறித்து தாக்கியது. இதில் பஸ்சின் முன் பக்கவாட்டு கண்ணாடி உடைந்து சேதம் அடைந்தது.

    இதை சற்றும் எதிர் பாராத டிரைவர் சுதாரித்துக்கொண்டு பஸ்சை நிறுத்தினார். இதன் காரணமாக அச்சமடைந்த பயணிகள் அலறினர். காட்டு யானையின் அடாவடி செயலால் உடுமலை- மூணார் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. யானை பஸ்சை தாக்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    மேலும் வனத்துறையினர் இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டு யானைகளை காட்டுக்குள் விரட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

    இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், கடந்த சில நாட்களாக உடுமலை- மூணார் சாலையில் காட்டு யானைகள் நடமாட்டம் இருந்து வருகிறது. அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் யானைகளுக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது. மேலும் சாலையின் ஓரங்களில் வாகனங்களை நிறுத்தக் கூடாது.யானைகளை துன்புறுத்தும் வகையில் ஒலி எழுப்புவதோ, கற்களை வீசுவதோ கூடாது. யானைகள் சாலையை கடக்கும் நிகழ்வு நேர்ந்தால் தூரத்தில் வாகனங்களை நிறுத்தி அவை சாலையை கடந்த பின்பு இயக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை வழங்கி உள்ளனர்.

    • பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வதோடு கட்டிடக் கலையின் நுட்பங்களையும் பார்த்து பிரமிப்புடன் செல்கின்றனர்.
    • கருவறையை நோக்கி ருக்மணி, தேவசேனாபதி ஆகியோர் சிவபுராணம் பாடியப்படி வந்தனர்.

    தஞ்சாவூர்:

    உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள், பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வதோடு கட்டிடக் கலையின் நுட்பங்களையும் பார்த்து பிரமிப்புடன் செல்கின்றனர்.

    இந்நிலையில் விழுப்புரத்தை சேர்ந்த சிறுமி ருக்மணி (வயது 12), அவரது 6 வயது சகோதரர் தேவசேனாபதி ஆகிய இருவரும் தஞ்சையில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்து பின்னர் பெரிய கோவிலுக்கு சென்றனர். அங்கு பெருவுடையாரை தரிசனம் செய்ய பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அந்த நேரத்தில் கருவறையை நோக்கி ருக்மணி, தேவசேனாபதி ஆகியோர் சிவபுராணம் பாடியப்படி வந்தனர்.

    பின்னர் பக்தர்களை கடந்து கருவறை முன்பு நின்று கொண்டு மனம் உருகி நமச்சிவாய வாழ்க.. நாதந்தாழ் வாழ்க... என மாணிக்கவாசகர் அருளிய சிவபுராணத்தை வெண்கல குரலில் சரியான ஏற்ற இறக்கத்துடன் ஒரு சேர தூய தமிழில் பாடினர். இதனை பெருவுடையார் தரிசனத்துக்காக கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த சிறு வயதில் பக்தியுடன் இப்படி ஒரு பாடலா என மெய்மறந்து ரசித்ததோடு குழந்தைகள் இருவரையும் மனதார பாராட்டினர்.

    குழந்தைகளின் இந்த பக்தி செயல் ஆன்மீக அன்பர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் பாராட்டும் வகையில் அமைந்திருந்தது என்றால் அது மிகையல்ல. 

    • அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.
    • சுற்றுலா போலீசார் மற்றும் உள்ளூர் போலீசார் இந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். சபரிமலை சீசன் முடிந்த நிலையில் அவர்களது வருகை நாளுக்கு நாள் குறைந்த வண்ணமாக இருந்தது.

    இருப்பினும் வாரத்தின் கடைசி நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிக அளவில் காணப்படுகிறது. அதன்படி விடுமுறைநாளான இன்று (சனிக்கிழமை) கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    குறிப்பாக கேரளா மற்றும் வடமாநில சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வந்திருந்தனர். அவர்கள், கடலில் சூரியன் உதயமாகும் காட்சியை காண முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித் துறை கடற்கரை பகுதியிலும், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு கிழக்கு பக்கம் உள்ள கிழக்கு வாசல் கடற்கரை பகுதியிலும் திரண்டு இருந்தனர். இன்று அதிகாலை சூரியன் உதயமான காட்சி தெளிவாக தெரிந்ததால் சுற்றுலா பயணிகள் அதனை பார்த்து ரசித்தனர். அதேபோல விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்ப்பதற்காக அதிகாலையிலேயே படகுத்துறையில் சுற்றுலா பயணிகள் வந்து காத்து இருந்தனர். சுமார் 1 மணி நேரம் படகு துறையில் சுற்றுலா பயணிகள் காத்திருந்து படகில் பயணம் செய்து விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட்டு விட்டு திரும்பினர். மேலும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், திருப்பதி வெங்கடாஜலபதி கோவில், கொட்டாரம் ராமர் கோவில், சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில், விவேகானந்த கேந்திர வளாகத்தில் அமைந்துஉள்ள பாரத மாதா கோவில், ராமாயண தரிசன சித்திர கண்காட்சி கூடம், காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், அரசு அருங்காட்சியகம், கலங்கரை விளக்கம், மீன்காட்சி சாலை, அரசு பழத்தோட்டம் சுற்றுச்சூழல் பூங்கா வட்டக்கோட்டை பீச் உள்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

    தற்போது கோடையை மிஞ்சும் வகையில் வெயில் கொளுத்துவதால் கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் முக்கடல் சங்கமத்தில் ஆனந்த குளியல் போட்டு உற்சாகம் அடைகின்றனர். மேலும் மாலை நேரங்களில் கடற்கரையில் இதமான குளிர் காற்று வீசுவதால் இரவு 9 மணி வரை கடற்கரையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. சுற்றுலா பயணிகள் வருகை "திடீர்"என்று அதிகரித்ததால் கடற்கரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுஇருந்தது. கடலோர பாதுகாப்பு குழும போலீசார், சுற்றுலா போலீசார் மற்றும் உள்ளூர் போலீசார் இந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    • யானைகள் மிரண்டு தாக்கும் அபாய நிலை உள்ளது.
    • சுற்றுலாப் பயணிகள் சில நேரங்களில் சாலையோரத்தில் நிற்கும் யானைகளின் அருகிலேயே வாகனத்தை நிறுத்துகின்றனர்.

    ஒகேனக்கல்:

    கோடை காலத்திற்கு முன்பே வனப்பகுதிகளில் வறட்சி நிலவுவதால் யானைகள் கூட்டம் கூட்டமாக கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்ட வனப்பகுதிகளில் சுற்றி திரிகின்றன. கோடை காலம் துவங்குவதற்கு முன்பே ஏற்பட்டுள்ள வறட்சியின் காரணமாக வனப்பகுதியை ஒட்டி உள்ள கிராமப் பகுதிகளில் யானைகள் அவ்வப்போது யானைகள் நுழைந்து விவசாய பயிர்களை நாசம் செய்வது வழக்கமாக உள்ளது.

    இந்த நிலையில் ஒகேனக்கல் வனப்பகுதிக்கு சுமார் 20-க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டமாக இடம்பெயர்ந்துள்ளன. ஒகேனக்கல் சுற்றுலா தளம் பென்னாகரம் பகுதியில் இருந்து 11 கிலோமீட்டர் வனப்பகுதிக்குள் செல்ல வேண்டிய நிலை உள்ளதால் இடம்பெயர்ந்துள்ள யானைகள் பென்னாகரம், ஒகேனக்கல் செல்லும் சாலையின் ஓரங்களில் உள்ள மரங்களை உடைத்தும், தண்ணீருக்காக கணவாய் பகுதியில் உள்ள வனப்பகுதிக்குள் உள்ள கூட்டுக் குடிநீர் திட்டம் சிறிய தொட்டிகளில் தண்ணீர் குடிக்க பென்னாகரம் ஒகேனக்கல் செல்லும் சாலைக்கு பகல் நேரங்களிலும் இரவு நேரங்களில் வந்து செல்கிறது.

    அப்போது இரவு நேரங்களில் ஒகேனக்கல் வரும் சுற்றுலாப் பயணிகள், யானையைக் கண்டதும் அச்சத்தில் வாகனங்களை நிறுத்துவது, வாகன ஒலி, ஒளி எழுப்புவது போன்ற செயல்களின் ஈடுபடுகின்றனர். இதனால் யானைகள் மிரண்டு தாக்கும் அபாய நிலை உள்ளது.

    ஒகேனக்கல் வனப்பகு தியில் பென்னாகரம் மற்றும் ஒகேனக்கல் வனத்துறையினரின் சார்பில் வைக்கப்பட்டுள்ள விழிப்புணர்வு பலகைகளை வாகன ஒளியில் யானைகள் மிரண்டு உடைத்திருப்பதால் யானைகள் கடக்கும் பகுதிகளை அறியாமல் சுற்றுலாப் பயணிகள் சில நேரங்களில் சாலையோரத்தில் நிற்கும் யானைகளின் அருகிலேயே வாகனத்தை நிறுத்துகின்றனர்.

    வறட்சி நிலவும் காலங்களில் ஆண்டுதோறும் யானைகள் ஒகேனக்கல் பகுதிக்கு இடம் பெயரும் சூழல் தொடர்ந்து நிகழ்வதால் பென்னாகரம் மற்றும் ஒகேனக்கல் வனத்து றையினர் இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டும், மடம் சோதனைச் சாவடி பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளுக்கு விழிப்பு ணர்வு ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். 

    • தர்ப்பணம் கொடுக்க ஏராளமானோர் திரண்டதால் முதலைப்பண்ணை பகுதியில் கூட்டம் அலை மோதியது.
    • சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றில் ஆழமான பகுதிக்கு சென்றுவிடமால் இருக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    ஒகேனக்கல்:

    தை அமாவாசை நாளில் காவிரியில் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்தால் குடும்பத்தில் வளம் செழிக்கும் என்பது ஐதீகம். வருடத்தின் ஆடி, புரட்டாசி, தை மாதங்களில் வரும் முக்கிய அமாவாசை நாட்களில் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் ஏராளமானோர் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.

    இதைத்தொடர்ந்து தை அமாவாசையான இன்று ஒகேனக்கல்லில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். முதலைப் பண்ணை பகுதியில் காவிரி கரையில் ஏராளமான பொதுமக்கள் வாழை இலை, பச்சரிசி, தேங்காய், பழம், காய்கறி, மளிகை பொருட்கள் உள்ளிட்ட வற்றை வைத்து பூஜைகள் செய்து முன்னோர்களை நினைத்து வழிபட்டனர்.

    பூஜை செய்த பொருட்களை காவிரி ஆற்றில் விட்டனர். பின்னர் அவர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடி அங்குள்ள காவிரி அம்மனை வழிபட்டனர்.

    இதில் தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், வேலூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்கள், ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களை சேர்ந்தவர்கள் என ஏராளமானவர்கள் ஒகேனக்கல்லுக்கு வந்து தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். ஒகேனக்கல்லில் இன்று தர்ப்பணம் கொடுக்க ஏராளமானோர் திரண்டதால் முதலைப்பண்ணை பகுதியில் கூட்டம் அலை மோதியது.

    இதனால் அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். மேலும், சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றில் ஆழமான பகுதிக்கு சென்றுவிடமால் இருக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் கர்நாடகா அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டதால் காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து இன்றும் வினாடிக்கு 300 கனஅடியாக நீடித்து வருகிறது. இதன் காரணமாக மெயினருவி, சினிபால்ஸ் ஆகிய அருவிகளில் தண்ணீர் குறைந்த அளவே கொட்டுகிறது.

    இருந்தபோதிலும் சுற்றுலா பயணிகள் அருவியிலும், காவிரி ஆற்றில் தேங்கிய உள்ள நீரிலும் குளித்து மகிழ்ந்தனர்.

    ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால், பஸ் நிலையம், கடைவீதி ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டன.

    • இந்தியாவில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு விசா தேவையில்லை என ஈரான் அறிவித்தது.
    • விசா இல்லாமல் பயணிக்க 4 முக்கிய நிபந்தனைகளை ஈரான் அறிவித்துள்ளது.

    டெஹ்ரான்:

    உலகின் பல்வேறு நாடுகளுக்கு இந்தியாவில் இருந்து செல்லும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என தரவுகள் தெரிவிக்கின்றன.

    இந்நிலையில், இனிமேல் இந்தியர்கள் ஈரான் நாட்டிற்குச் செல்லும்போது விசா தேவையில்லை என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

    இந்த அறிவிப்பு கடந்த 4-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.

    ஆனாலும், விசா இல்லாமல் பயணிக்க 4 முக்கிய நிந்தனைகளை ஈரான் அறிவித்துள்ளது. அவை பின்வருமாறு:

    சாதாரண பாஸ்போர்ட் உள்ளவர்கள் 6 மாதத்துக்கு ஒருமுறை மட்டும் விசா இன்றி ஈரானுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள். அதிகபட்சமாக 15 நாட்கள் தங்கலாம். எக்காரணம் கொண்டும் இதை நீட்டிக்க முடியாது.

    வான் எல்லை வழியாக நாட்டிற்குள் நுழையும் இந்தியர்களுக்கு மட்டுமே இந்த அறிவிப்பு பொருந்தும்.

    சுற்றுலாவுக்காக ஈரான் வருவோருக்கு மட்டுமே இந்த விசா இன்றி பயணம் என்ற முறை பொருந்தும்.

    அனுமதிக்கப்பட்ட நாட்களை விட அதிக காலம் தங்க விரும்பினால் அல்லது 6 மாத காலத்திற்குள் பல முறை வர விரும்பினால், அவர் ஈரானிடம் இருந்து உரிய விசா பெறவேண்டும்.

    ஏற்கனவே மலேசியா, இலங்கை, இந்தோனேசியா, தாய்லாந்து, கென்யா, வியட்நாம் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இந்திய பயணிகளுக்கு விசா தேவையில்லை என அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • மோட்டார் படகுகள் மற்றும் மோட்டார் ஸ்கூட்டர்கள் ஆகியவற்றை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
    • படகுகளில் பயணிக்க ஆர்வமாக வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

    சென்னை:

    சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் முட்டுக்காடு பகுதியில் தமிழக அரசின் சுற்றுலாத்துறைக்கு சொந்தமான படகு குழாம் உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்கள் விடுமுறையின் போது குடும்பத்துடன் முட்டுக்காடு படகு குழாமுக்கு வந்து படகு சவாரி செய்வது வழக்கம்.

    குறிப்பாக பெண்கள், குழந்தைகளுடன் வரும் சுற்றுலா பயணிகள் முட்டுக்காடு படகு குழாமில் உள்ள மோட்டார் படகுகள், கால்களால் இயக்கக்கூடிய மிதி படகுகள், நீரில் பாய்ந்து செல்லக்கூடிய மோட்டார் ஸ்கூட்டர்கள் ஆகியவற்றை பயன்படுத்தி சவாரி செய்து மகிழ்வார்கள்.

    இந் நிலையில் கடந்த டிசம்பர் மாதம் பெய்த மிச்சாங் புயல் மழையின் காரணமாக பருவநிலையில் பெரும் மாற்றம் காணப்படுகிறது. இதனால் எப்போதும் நீர் நிறைந்து காணப்படும் முட்டுக்காடு முகத்துவார பகுதி தற்போது நீர் வற்றி ஆங்காங்கே மணல் திட்டுகளாக காட்சியளிக்கிறது. இதன் காரணமாக இங்கு தற்போது மோட்டார் படகுகள் மற்றும் மோட்டார் ஸ்கூட்டர்கள் ஆகியவற்றை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நேற்று சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து முட்டுக்காடு படகு குழாமில் படகுகளில் பயணிக்க ஆர்வமாக வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

    இதுகுறித்து தமிழ்நாடு அரசின் சுற்றுலாத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:- மிச்சாங் புயல் போன்ற இயற்கை சீற்றத்தின் காரணமாகபருவ நிலையில் மாற்றம் ஏற்பட்டு முட்டுக்காடு முகத்துவாரத்தில் தண்ணீர் வற்றி உள்ளது. ஓரிரு நாட்களுக்கு இந்த நிலை நீடிக்கலாம். இதன் காரணமாக மோட்டார் படகுகளை இயக்க முடியவில்லை. பொதுமக்களின் வசதிக்காக மிதி படகுகள் மட்டும் இயக்கப்படுகின்றன. இதனால் ஒரு சிலர் மட்டுமே அந்த மிதி படகுகளை பயன்படுத்தி சவாரி சென்றனர். மற்றவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினார்கள்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • கோடையின் வெப்பமே தெரியாத அளவுக்கு இங்கு குளிர் வாட்டி வரும் நிலையில் சுற்றுலா பயணிகள் இதனை உற்சாகமாக அனுபவித்து வருகின்றனர்.
    • விடுமுறை முடிந்த பிறகும் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் தற்போது கடும் குளிர் சீசன் நிலவி வருகிறது. கடந்த வாரம் உறை பனி காணப்பட்ட நிலையில் புல்வெளிகள் மற்றும் நட்சத்திர ஏரியில் பனித்துளிகள் படர்ந்து காணப்பட்டது. வழக்கமாக கொடைக்கானலில் டிசம்பர் மாத இறுதியில் உறை பனி சீசன் தொடங்கி ஜனவரி மாதம் வரை நீடிக்கும். ஆனால் இந்த ஆண்டு பருவம் தவறி பெய்த மழையால் உறை பனி சீசன் தாமதமானது. இருந்த போதும் கடும் குளிர்ந்த சீதோஷ்ணம் காணப்படுகிறது.

    மலை கிராமங்களில் பனி மூட்டத்துடன் கூடிய மேக கூட்டங்கள் தவழ்ந்து செல்லும் காட்சி பகல் பொழுதையும், ரம்மியமாக்கி வருகிறது. கோடையின் வெப்பமே தெரியாத அளவுக்கு இங்கு குளிர் வாட்டி வரும் நிலையில் சுற்றுலா பயணிகள் இதனை உற்சாகமாக அனுபவித்து வருகின்றனர்.

    கொடைக்கானல் அருகே உள்ள மன்னவனூர் சூழல் சுற்றுலா மையம், மற்றும் ஏரி பகுதியில் வெண் நுரையுடன் கடல் அலைகள் வருவது போல பனி மூட்டம் காணப்படுகிறது. இதனை சுற்றுலா பயணிகள் தங்கள் செல்போனில் படம் பிடித்து மகிழ்ந்து வருகின்றனர்.

    விடுமுறை முடிந்த பிறகும் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    அவர்கள் கொடைக்கானலில் நிலவும் ரம்மியமான சூழலை அனுபவித்து வருகின்றனர். ஏரியில் படகு சவாரி செய்தும், குதிரை சவாரியில் ஈடுபட்டும் பிரையண்ட் பூங்கா, குணாகுகை, பசுமை பள்ளத்தாக்கு மோயர் பாயிண்ட் உள்ளிட்ட சுற்றுலா இடங்களை கண்டு ரசித்து வருகின்றனர். 

    ×