செய்திகள்
கோப்புபடம்

மதுரையில் குணமடைந்தோர் எண்ணிக்கை 96 சதவீதமாக உயர்வு - 2.5 சதவீதம் பேருக்கு தொடர் சிகிச்சை

Published On 2021-06-19 08:54 GMT   |   Update On 2021-06-19 08:54 GMT
மதுரை மாவட்டத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து சரிந்து வருவதால் தற்போது 2.5 சதவீதம் பேர் மட்டுமே தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். 96 சதவீதம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மதுரை:

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கம் தமிழகத்திலும் தீவிரம் காட்டி வருகிறது. மதுரை மாவட்டத்தில் முதல் மற்றும் 2-வது அலையில் நோய்தொற்றுக்கு ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் இந்த மாதம் (ஜூன்) இறுதி வரை இதுவரை 71 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 68 ஆயிரத்து 208 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இது பாதிக்கப்பட்ட எண்ணிக்கையில் 96 சதவீதமாகும். மேலும் 1066 பேர் உயிரிழந்துள்ளனர்.இது 1.5 சதவீதம் ஆகும். தினசரி பாதிப்பிலும் மதுரையில் நோய் பரவல் வெகுவாக குறைந்துள்ளது நேற்று 160 பேர் மட்டுமே புதிதாக பாதிக்கப்பட்டனர்.

இவர்களையும் சேர்த்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 1726 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது பாதிப்பு எண்ணிக்கையில் 2.5 சதவீதம் ஆகும்.

கொரோனா முதல் அலையில் ஏற்பட்ட உயிரிழப்புகளை விட 2வது அலையில் உயிரிழப்புகள் அதிகம் ஏற்பட்டுள்ளது. கடந்த 3 மாதங்களில் 611 பேர் பலியாகி உள்ளனர். நோய் தொற்று குறைந்தாலும் உயிரிழப்பு தொடர்ந்து நடந்து வருகிறது. நேற்று மட்டும் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மக்கள் மத்தியில் தொடர்ந்து அச்சம் நிலவி வருகிறது. உயிரிழப்புகளை தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

மதுரை மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த 2 மாதங்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 2 ஆயிரத்திற்கு கீழ் வந்துள்ளது இது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கொரோனா இல்லாத மாவட்டமாக மதுரை விரைவில் மாறும் வகையில் அனைத்து நடவடிக்கைகளும் முழுவீச்சில் எடுக்கப்பட்டு வருகிறது.

தினமும் 20-க்கும் மேற்பட்ட முகாம்களில் பொதுமக்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 4 லட்சத்து 45 ஆயிரத்து 553 பேருக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு உள்ளது. தற்போது 7570 தடுப்பு ஊசிகள் கையிருப்பு உள்ள நிலையில் தொடர்ந்து மதுரையில் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகின்றன.

கொரோனா பரவல் குறைந்துள்ளதால் வருகிற 21-ந் தேதி முதல் மதுரை மாவட்டத்தில் மேலும் பல தளர்வுகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொதுப்போக்குவரத்து, ஜவுளிக்கடைகள் மற்றும் பல்வேறு வணிக நிறுவனங்கள் செயல்பட அரசு அனுமதி வழங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News