செய்திகள்
கறிக்கோழி

மதுரை மாவட்டத்தில் ஆட்டிறைச்சி கடைகள் மூடப்பட்டதால் மீன், கறிக்கோழி விலை உயர்வு

Published On 2020-04-03 10:54 GMT   |   Update On 2020-04-03 10:54 GMT
மதுரை மாவட்டத்தில் ஆட்டிறைச்சி கடைகள் இன்று மூடப்பட்டதால் அசைவ பிரியர்கள் மீன் மற்றும் கோழிகளை வாங்க ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
மதுரை:

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா பாதிப்பிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் வகையில் நாடு முழுவதும் வருகிற 14-ந் தேதி வரை சுய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வராத வகையில் நாடு முழுவதும் முக்கிய சாலைகள் அடைக்கப்பட்டுள்ளன. தமிழகத்திலும் கொரோனா தாக்கத்தை குறைக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

ஊரடங்கு காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காத வகையில் அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் அரிசி, மளிகை, காய்கறிகள் மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைக்க மாவட்ட நிர்வாகமும் மாநக ராட்சியும் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. மக்கள் நெரிசலைத் தவிர்க்கும் வகையிலும் சமூக இடை வெளியை கடைப்பிடிக்கும் வகையிலும் பல்வேறு இடங்களில் தற்காலிக மார்க்கெட்டுகள் மற்றும் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

மீன் இறைச்சி உள்ளிட்ட பொருட்களை வாங்குவதற்காக மதுரையில் சில நாட்களாக கடைகளில் அதிகளவில் மக்கள் திரண்டனர்.

இதனை சீரமைக்கும் வகையிலும் கொரோனா தொற்று வருவதைத் தடுக்கவும் தேவையான வழிமுறைகள் குறித்து மதுரை மாவட்ட கலெக்டர் வினய், மாநகராட்சி கமி‌ஷனர் விசாகன், போலீஸ் கமி‌ஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம், மற்றும் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

இறைச்சி கடைகளில் மக்கள் கூடுவதை தவிர்க்கும் வகையில் ஊரடங்கு முடியும்வரை அனைத்து ஆட்டிறைச்சி கடைகளும் மூடப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தைப் பொறுத்தவரை 500-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆட்டிறைச்சி கடைகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த கடைகள் இன்று முதல் மூடப்பட்டுள்ளதால் அசைவ பிரியர்கள் மீன் மற்றும் கோழிகளை வாங்க ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதனால் இன்று கோழி மற்றும் மீன் கடைகளில் மக்கள் அதிகளவில் கூடினர். அங்கு சமூக இடைவெளியை கடைப்பிடித்து தேவையான ஆட்டிறைச்சிகளை வாங்கி சென்றனர். இறைச்சி கடை மூடப்பட்டுள்ளதால் மீன், கோழிக்கறி விலை அதிகரித்துள்ளது நாட்டுக்கோழி இன்று 600 ரூபாய் வரை விற்கப்பட்டது. பிராய்லர் கோழிக்கறி 200 ரூபாய்க்கும், கோழி முட்டை ரூ. 3.50க்கும் விற்கப்பட்டன மீன்களின் விலை வழக்கத்தைவிட ரூ. 50 முதல் 100 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. இந்த விலை ஏற்றம் அசைவ பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும் தேவையை உணர்ந்து பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கிறார்கள்.
Tags:    

Similar News