செய்திகள்
முக ஸ்டாலின்.

தமிழ்நாடே போர்க்கோலம் வரைகிறது, எடப்பாடி அரசுக்கு நன்றி- மு.க. ஸ்டாலின் டுவிட்

Published On 2019-12-30 10:33 GMT   |   Update On 2019-12-30 10:33 GMT
மாவுக்கோலத்தால் கூட மத்திய அரசு காயம்படக் கூடாது என அதிமுக அரசு நினைப்பதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கடுமையாக சாடியுள்ளார்.
சென்னை:

குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் தேசிய மக்கள்தொகை பதிவேடுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், சென்னை பெசன்ட்நகரில் 5 பெண்கள் உள்பட 8 பேர் தெருவில் கோலம் போட்டு நூதன முறையில் போராட்டம் நடத்தினார்கள். அப்போது, தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் தேசிய மக்கள்தொகை பதிவேட்டிற்கு எதிராக கோஷம் எழுப்பினார்கள்.

முறையான அனுமதியின்றி இந்த போராட்டம் நடைபெற்றதாகவும், அடுத்தவர்களுக்கு தொந்தரவு செய்யும் வகையில் இந்த நிகழ்வு அமைந்ததாகவும் சாஸ்திரிநகர் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி, கைது செய்தனர். அரசின் இந்த நடவடிக்கைக்கு, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர். 

திமுக மகளிரணியினர் என்ஆர்சி, சிஏஏவுக்கு எதிராக, தங்கள் வீடுகளில் கோலங்கள் போட்டு எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர். கனிமொழியின் சென்னை, தூத்துக்குடி இல்லங்களின் வாசல்களிலும் இத்தகைய கோலங்கள் போடப்பட்டுள்ளன. இதுதொடர்பான, dmkkolamprotest, KolamAgainstCAA என்ற ஹேஷ்டேக்குகள் டுவிட்டரில் ட்ரெண்டாகி வருகின்றன.

பொதுமக்கள் பலரும் தங்கள் இல்லங்களில் கோலம் போட்டு எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர். அதேபோல தமிழ்நாடு காங்கிரஸின் மகளிர், சிறுபான்மை உள்ளிட்ட அணியினரும் இந்தக் கோலப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட் பதிவில், கூறியிருப்பதாவது;  “மாவுக்கோலத்தால் கூட மத்திய அரசு காயம்படக் கூடாது எனக் காக்கும் கொத்தடிமை அதிமுக அரசால் வழக்குப் பதிவு செய்யப்பட்ட இளைய சமுதாயத்தினர் என்னை சந்தித்தனர். ஒரு கோலத்தை அழிக்க இந்த அலங்கோல ஆட்சி முயன்றது. இதோ தமிழ்நாடே போர்க்கோலம் வரைகிறது! எடப்பாடி அரசுக்கு நன்றி! #DMKkolamProtest” என்று பதிவிட்டுள்ளார்.
Tags:    

Similar News