செய்திகள்
குமாரசாமிப்பேட்டை பகுதியில் பனி சூழ்ந்து இருப்பதை படத்தில் காணலாம்.

தர்மபுரியில் கடும் பனி மூட்டம்- பொதுமக்கள் தவிப்பு

Published On 2019-12-16 13:21 GMT   |   Update On 2019-12-16 13:21 GMT
தர்மபுரியில் இன்று கடும் பனி மூட்டம் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் வெளியில் செல்ல முடியாமல் தவித்தனர்.
தருமபுரி:

தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக காலை, மாலை நேரங்களில் பரவலாக மழைபெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் ஏரி, கிணறுகளில் தண்ணீர் வேகமாக நிரம்பியது. இந்த ஆண்டு பெய்த மழை நீரை வைத்து விவசாயிகள் விவசாயம் செய்ய தொடங்கினர். 

நேற்றிரவு வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதனால் இரவு மழை வருமோ? என்று மக்கள் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் மழை பெய்யவில்லை. இரவு முழுவதும் கடும் குளிர் தான் அதிகமாக காணப்பட்டது. இதனால் நகரில் பெண்கள் மற்றும் பெரியவர்கள் காலையில் நடைபயிற்சிக்கு செல்லாமல் வீட்டிலேயே முடங்கி விட்டனர். 

இன்று அதிகாலை தருமபுரி மாவட்டம், காரிமங்கலம், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, பாப்பாரப்பட்டி, கடத்தூர், தொப்பூர், நல்லம்பள்ளி, அதியமான்கோட்டை, மதிகோன்பாளையம், தருமபுரி நகர் உள்ளிட்ட இடங்களில் கடும் பனிமூட்டம் காணப்பட்டது.  பனிமூட்டம் நிலவியதால் கிருஷ்ணகிரி-சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகள் எரியவிட்டபடியே பயணித்தனர்.

தொப்பூர் மலைபாதையிலும் கடும் பனிமூட்டம் நிலவியது. சாலையே தெரியாத அளவுக்கு பனி மூட்டம் காணப்பட்டது. அதனால் கார், வேன் போன்ற வாகனங்களில் வந்தவர்கள் தங்களது வாகனங்களை சாலையோரமாக நிறுத்தி விட்டு ஓய்வு எடுத்து பின்னர் பயணம் செய்தனர்.

இதே போன்று தருமபுரி நகரில் எஸ்.வி. சாலை, கடைவீதி, திருப்பத்தூர் செல்லும் சாலை, பழைய தருமபுரி உள்பட பல இடங்களில் சாலையே தெரியாத அளவுக்கு கடும் பனி நிலவி காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் வெளியில் செல்ல முடியாமல் தவித்தனர்.
Tags:    

Similar News