செய்திகள்
கேஎஸ் அழகிரி

மறைமுக தேர்தல் குதிரை பேரத்திற்கு வழி வகுக்கும்- கே.எஸ்.அழகிரி

Published On 2019-11-22 05:34 GMT   |   Update On 2019-11-22 05:34 GMT
மறைமுக தேர்தல் ஆட்களை தூக்கி செல்லும் குதிரை பேரத்திற்கு வழி வகுக்கும் என்று நெல்லையில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
நெல்லை:

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நெல்லையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அ.தி.மு.க. அரசு உள்ளாட்சி தேர்தலில் முதலில் இருந்தே நேர்மையாக செயல்படவில்லை. கோர்ட்டு உத்தரவுக்கு பிறகே உள்ளாட்சி தேர்தலுக்கான வேலைகளை செய்து வருகின்றனர்.

உச்சநீதிமன்றத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிக்கைகளை தாக்கல் செய்த போது நேரடி தேர்தல் முறை நடத்தப்படும் என்று கூறினர். ஆனால் தற்போது அமைச்சரவை கூட்டத்திற்கு பின்பு மறைமுக தேர்தல் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். இந்த வகையான மறைமுக தேர்தல் ஆட்களை தூக்கி செல்லும் குதிரை பேரத்திற்கு வழி வகுக்கும். இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.



மு.க.ஸ்டாலின் 2006-ல் கொண்டு வந்த அதே தீர்மானத்தை தான் தற்போது நாங்கள் செயல்படுத்துகிறோம் என்று எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். தி.மு.க.வை எதிர்க்கும் எடப்பாடி தற்போது ஸ்டாலினை போல் என்கிறார். அப்படியெனில் ஸ்டாலின் தொண்டரா அவர்.

2021-ல் ரஜினிகாந்த் அதிசயம் நடக்கும் என்று கூறுவது சினிமா படத்தை பற்றியதாக இருக்கும். அரசியல் வேறு, நடிப்பு வேறு. ரசிகர் மன்றத்தின் மூலம் நற்பணிகள் செய்திருக்கலாம். ஆனால் அரசியலுக்கு வந்தால் அதுபோல் நடக்காது.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கர பாண்டியன், நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ்கேஎம்.சிவகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.
Tags:    

Similar News