செய்திகள்
முத்தரசன்

அரசியலில் இணைவதை விட ரஜினியும், கமலும் சேர்ந்து படங்களில் நடிக்கலாம்- முத்தரசன்

Published On 2019-11-20 12:29 GMT   |   Update On 2019-11-20 12:29 GMT
ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் அரசியலில் இணைவதை விட இருவரும் இணைந்து திரைப்படத்தில் நடித்தால் நன்றாக இருக்கும் என்று முத்தரசன் கூறியுள்ளார்.

கும்பகோணம்:

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இன்று கும்பகோணத்திற்கு வந்தார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் வெளிப்படையற்ற தன்மையாக இருந்து வருகிறது. தேர்தல் நடக்குமா? நடக்காதா? என்ற பல்வேறு தகவல்கள் பரிமாறப்பட்டு வருகிறது.

நேற்று நடைபெற்ற அமைச்சரவையில் மறைமுக தேர்தல் நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டது போல் தெரிகிறது. இந்த உள்ளாட்சித் தேர்தல் வெளிப்படைத்தன்மையாக இருக்க வேண்டும். மறைமுக தேர்தலுக்கு தமிழக அரசு தீர்மானம் செய்தால் ஆளுநர் ஒப்புதல் பெற வேண்டும். ஆனால் ஆளுநர் மறைமுக தேர்தலுக்கு ஒப்புதல் அளிக்கக் கூடாது.

உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாததால் குடிநீர், மின்சாரம் உள்பட பல்வேறு அடிப்படை வசதிகள் உள்ளாட்சி பிரதிநிதித்துவம் இல்லாததால் அரசு அதிகாரிகள் ஊழலில் ஈடுபட்டு வருகின்றனர்.

100 சதவீதம் வரி உயர்வை கண்டித்து அனைத்து கட்சியினர் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். அப்போதெல்லாம் செவி சாய்க்காத தமிழக அரசு, தற்போது உள்ளாட்சி தேர்தல் நேரத்தில் வரி வசூலை நிறுத்தி வைத்துள்ளது. வரி வசூலை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும்.

வடகிழக்கு பருவமழையை நல்ல வாய்ப்பாக பயன்படுத்தி விவசாயிகள் சம்பா சாகுபடி செய்து வருகின்றனர். சம்பா சாகுபடிக்கு தேவையான யூரியாவுக்கு அரசே தட்டுப்பாடு ஏற்படுத்தி அதிக விலைக்கு ஏற்பாடு செய்கிறது என்கிற எண்ணம் விவசாயிகளிடையே நிலவி வருகிறது.

தீபாவளிக்கு டாஸ்மாக் விற்பனைக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது போல் யூரியா இருப்புக்கு இலக்கு நிர்ணயம் செய்ய தமிழக அரசு தவறிவிட்டது.

பயிர் காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளாக பணம் செலுத்திய விவசாயிகளுக்கு அதனை திருப்பி வழங்காமல் தனியார் காப்பீட்டு நிறுவனம் ஏமாற்றி வருகிறது. தமிழக அரசு உடனடியாக 4 ஆண்டுகளுக்கும் பயிர் காப்பீட்டு தொகையை வழங்க வேண்டும்.


ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் அரசியலில் இணைவதை விட இருவரும் இணைந்து திரைப்படத்தில் நடித்தால் நன்றாக இருக்கும்.

மத்திய அரசு பொதுத்துறைகளை தனியார் மயமாக்குவது மிகவும் கண்டிக்கத்தக்கது. மேலும் இந்த செயல் பொருளாதாரத்தை மிகவும் சீர்குலைத்து விடும்

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News