செய்திகள்
குழந்தைகள் மீட்பு

பாலியல் வன்கொடுமையில் இருந்து 56 குழந்தைகள் மீட்பு - பி.எம்.எம்.எஸ். இயக்குனர் தகவல்

Published On 2019-11-12 09:53 GMT   |   Update On 2019-11-12 09:53 GMT
புதுவையில் 6 மாதத்தில் பாலியல் வன்கொடுமையில் இருந்து 56 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளதாக பி.எம்.எம்.எஸ். இயக்குனர் கூறினார்.
புதுச்சேரி:

புதுவை பி.எம். எம்.எஸ். இயக்குனர் அருமை செல்வம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

புதுவை பல்நோக்கு சமூக சேவை சங்கம் மூலம் கடந்த 2011-ம் ஆண்டு முதல் சைல்டு லைன் 1098 அமைப்பு செயல்பட்டு வருகிறது. இதில் 18 வயதிற்குட்பட்டவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டு வருகிறது.

கடந்த 6 மாதத்தில் 260 புகார்கள் வந்துள்ளது. பாலியல் வன்கொடுமையிலிருந்து 56 குழந்தைகள் மீட்கப்பட்டு உள்ளனர். 11 குழந்தை திருமணம் தடுக்கப்பட்டுள்ளது. வீட்டை விட்டு வெளியேறிய 12 குழந்தைகள், குடும்ப பிரச்சினைகளில் இருந்து 33 குழந்தைகள் மீட்கப்பட்டு உள்ளனர்.

ஆண்டுதோறும் குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு சைல்டு லைன் நண்பன் என்ற பிரசாரத்தை நடத்தி வருகிறது.

இந்த ஆண்டு வருகிற 14-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை இந்த பிரசாரம் நடக்கிறது. 14-ந் தேதி மாலை 5 மணிக்கு கலெக்டர் அருண் இந்த பிரசாரத்தை தொடங்கி வைக்கிறார். 15-ந் தேதி குழந்தைகள் நலக்குழு அலுவலகத்தில் பிரசாரம் நடக்கிறது.

17-ந் தேதி கடலூர் சாலை வணிக வளாகத்தில் கிட்ஸ் கார்னர் நிகழ்ச்சி நடக்கிறது. 18-ந் தேதி மனிதசங்கிலி, 19-ந் தேதி மரக்கன்று நடுதல், 20-ந் தேதி பட்டிமன்றம் ஆகியவை நடக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது குழந்தைகள் பாதுகாப்பு திட்ட நிகழ்ச்சி மேலாளர் செல்வ முருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News