செய்திகள்
திருமாவளவன்

உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணி தொடரும்- திருமாவளவன்

Published On 2019-11-12 07:58 GMT   |   Update On 2019-11-12 07:58 GMT
உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வுடனான கூட்டணி தொடரும், இணைந்து பணியாற்றுவோம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னை:

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தி.மு.க. தலைவரை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். தி.மு.க. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை பாராட்டி அவருக்கு எனது கருத்துக்களை தெரிவித்தேன்.

ஒரே தேசம், ஒரே கலாசாரம் என்ற அடிப்படையில் இந்தியாவை ஒருமைத்துவத்தை நோக்கி மோடி அரசு கொண்டு செல்கிறது.

இதனால் நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு ஆபத்து சூழ்ந்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில் மாநில உரிமைகளுக்கு குரல் கொடுக்கும் வகையில் ராஜமன்னார் குழு பரிந்துரைகளை நிறைவேற்ற கோரி தி.மு.க. பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றியதை பாராட்டினேன். தனியார் துறை ஒதுக்கீடு பற்றிய தீர்மானத்தையும் பாராட்டினேன்.

மேலவளவு கொலையாளிகளை விடுதலை செய்தது சட்டவிரோதமானது. இதுகுறித்து சட்ட வல்லுனர்களை கலந்து பேசி நீதிமன்றத்தை அணுகுவோம். உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வுடனான எங்கள் கூட்டணி தொடரும், இணைந்து பணியாற்றுவோம்.

இவ்வாறு திருமாவளவன் கூறினார்.



பின்னர் திருவள்ளுவர் சிலை அவமதிப்பை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வள்ளுவர் கோட்டம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி. தலைமை தாங்கினார்.

சிந்தனை செல்வன், ரவிக்குமார் எம்.பி., முகமது யூசுப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் திராவிடர் கழக துணைத் தலைவர் கலிபூங்குன்றன், திராவிடர் இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப. வீர பாண்டியன், தமிழ்தேசிய இயக்க தலைவர் தியாகு ஆகியோர் பேசினார்கள்.

ஆர்ப்பாட்டத்தின்போது வள்ளுவர் சிலையை அவமதித்தவர்களை கைது செய்ய வேண்டும் என்று முழக்கமிட்டனர்.

கூட்டத்தில் திருமாவளவன் பேசும் போது, திருவள்ளுவரை அவமதிக்கும் வகையில் அவரது சிலைக்கு காவி உடை, திருநீறு பூசி அவர் மீது மத சாயம் பூச முயற்சித்த தமிழ்நாடு பா.ஜனதாவினர் மீதும், தஞ்சை பிள்ளையார்பட்டியில் திருவள்ளுவர் சிலையை அவமதித்தவர்கள் மீதும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அவர்களை கைது செய்து தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும். இதுவரை அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத தமிழக அரசின் மெத்தன போக்கை விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது என்றார்.

ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் எஸ்.எஸ்.பாலாஜி, விந்தை அரசன், ஆளூர் ஷாநவாஷ், பாரி வேந்தன், மாவட்ட செயலாளர்கள் டி.கோ. ஆதவன், செல்லத்துரை, இரா.செல்வம், ரவிசங்கர், அன்பு செழியன், அம்பேத் வளவன், தங்க தமிழன், கரிகால்வளவன், வீரராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News