செய்திகள்
முத்தரசன்

திருவள்ளுவர் சிலை அவமதிப்பு சம்பவத்தில் தமிழக அரசு இரட்டை வேடம் போடுகிறது- முத்தரசன்

Published On 2019-11-08 09:57 GMT   |   Update On 2019-11-08 09:57 GMT
தஞ்சையில் திருவள்ளுவர் சிலை அவமதிப்பு சம்பவத்தில் தமிழக அரசு இரட்டை வேடம் போடுகிறது என்று முத்தரசன் கூறியுள்ளார்.

தஞ்சாவூர்:

தஞ்சையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடந்தது. இதில் கலந்து கொண்ட கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

டெல்டா மாவட்டங்களில் இன்னும் ஏராளமான விவசாயிகள் கஜா புயலில் பாதிப்பில் இருந்து மீளவில்லை. அவர்களுக்கு அறிவிக்கப்பட்ட நிவாரணமோ, சலுகைகளோ இன்னும் கிடைக்கவில்லை. பயிர் காப்பீட்டு தொகையும் முழுமையாக வழங்கப்படவில்லை. கூட்டுறவு வங்கி மற்றும் பிற வங்கிகளில் இந்தாண்டு சாகுபடிக்கு விவசாயிகளுக்கு கடன் வழங்கப்படவில்லை.

இந்தாண்டு தீபாவளி பண்டிகைக்கு டாஸ்மாக் கடைகளில் மது விற்க இலக்கு நிர்ணயித்து 15 நாட்களுக்கு முன்னதாகவே போதியளவில் மதுபாட்டில்களை இருப்பு வைக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்தது.

ஆனால் சம்பா, தாளடி நெற்பயிர் சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு தேவையான உரங்களை இருப்பு வைக்க எந்த அக்கறையும் காட்ட வில்லை. இதனால் விவசாயிகள் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்.

மது விற்பனையில் மும்முரம் காட்டும் தமிழக அரசு விவசாயிகளின் நலனிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும். தமிழக அரசு, விவசாயிகளையும், கார்ப்பரேட் நிறுவனங்களையும் இணைக்கும் ஒப்பந்தம் குறித்து சட்டம் நிறைவேற்றி உள்ளது. இது கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாக இருக்கும். இது வேதனைக்குரியது. திருவள்ளுவர் அனைத்து மதத்தினருக்கும் பொதுவானவர். அவர் ஜாதி, மதம் கடந்தவர். ஆனால் பா.ஜனதா கட்சியினர் அவரது படத்துக்கு காவி பூசி மத சாயம் பூச முயற்சிக்கிறது.

இதற்கு ஆரம்பத்திலேயே தமிழக அரசு இதில் நடவடிக்கை எடுத்திருந்தால், தஞ்சையில் திருவள்ளுவர் சிலைக்கு அவமதிப்பு ஏற்பட்டிருக்காது. இதில் தமிழக அரசு இரட்டை வேடம் போடுகிறது.

தேனியில் திருவள்ளுவர் சிலை அவமதிப்பு செய்யப்பட்டதாக கூறி பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆனால் அந்த மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை என்று அறிக்கை வெளியிடுகிறார். இந்த சம்பவங்களில் தமிழக அரசு குற்றவாளிகளை கைது செய்வதில் தயக்கம் காட்டுகிறது.


ராமதாஸ் எந்தவித பொய்யையும் துணிச்சலாக கூறக் கூடியவர். முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் இருப்பதாக நிரூபித்தால் அரசியலை விட்ட விலகத் தயார். இல்லை என்றால் ராமதாசும், அன்புமணியும் விலகத் தயாரா? என்று மு.கஸ்டாலின் கேட்டதற்கு இதுவரை அவர்கள் எந்த பதிலும் அளிக்கவில்லை. இது காழ்ப்புணர்ச்சி அரசியலை காட்டுகிறது. அரசியலில் தங்களை நிலை நிறுத்திக்கொள்ள ராமதாஸ் முயற்சிக்கிறார். இதனை கைவிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News