செய்திகள்
நகைகள் கொள்ளை

தனியார் தொழிற்சாலை ஊழியர் வீட்டில் ரூ.45 லட்சம் நகைகள் கொள்ளை

Published On 2019-08-05 07:59 GMT   |   Update On 2019-08-05 07:59 GMT
ஓசூரில் தனியார் தொழிற்சாலை ஊழியர் வீட்டில் ரூ.45 லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஓசூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஏ.எஸ்.டி.சி. அட்கோ பகுதியை சேர்ந்தவர் ராமசாமி (வயது 58).

ஓசூர் தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்த இவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட சாலை விபத்தில் காயம் அடைந்தார். இதனால் ராமசாமி கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். அவருடன் அவரது குடும்பத்தினரும் தங்கி இருந்து அவரை கவணித்து வந்தனர்.

இந்த நிலையில் ராமசாமியின் உறவினரான ராமகிருஷ்ணன் என்பவர் ராமசாமியின் ஓசூர் வீட்டில் தங்கி பெங்களூருக்கு வேலைக்கு சென்று வந்தார். இந்த நிலையில் ராமகிருஷ்ணன் கடந்த வெள்ளிக்கிழமை அன்று தனது சொந்த ஊரான நெல்லை சென்றிருந்தார்.

பின்னர், இன்று காலை 8 மணி அளவில் ஓசூருக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பதட்டம் அடைந்த ராமகிருஷ்ணன் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்ட நிலையில் இருந்தது. வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தும் சிதறிய நிலையில் கிடந்தது.

பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 150 பவுன் தங்க நகைகளும் மற்றும் ஒன்றரை கிலோ வெள்ளி பொருட்களும் திருட்டு போனது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ. 45 லட்சம் ஆகும்.

இதுகுறித்து ஓசூர் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர், விரைந்து வந்த போலீசார் கொள்ளைபோன வீட்டில் ஆய்வு மேற்கொண்டனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகை பதிவுகளை சேகரித்தனர். பின்னர் மோப்ப நாயும் வரவழைக்கப் பட்டது.

இதுகுறித்து ராமசாமி தெரிவித்த புகாரின்பேரில் ஓசூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பூட்டிக்கிடந்த வீட்டில் கொள்ளை நடந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News