செய்திகள்
சென்னை ஐகோர்ட்

செக் மோசடி வழக்கு - முன்னாள் எம்.பி. அன்பரசுக்கு சிறை தண்டனையை உறுதிசெய்தது ஐகோர்ட்

Published On 2019-07-24 06:41 GMT   |   Update On 2019-07-24 06:41 GMT
செக் மோசடி வழக்கில் முன்னாள் எம்.பி. அன்பரசுக்கு கீழ் கோர்ட்டு வழங்கிய 2 ஆண்டு சிறை தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.
சென்னை:

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.பி. அன்பரசு. இவர், ராஜீவ் காந்தி அறக்கட்டளை என்ற அமைப்பை நடத்தி வருகிறார். இதில், உதயம் தியேட்டர் பங்குதாரர் மணியும் நிர்வாகியாக உள்ளார். இவர்கள், பைனான்சியர் முகுந்த் சந்த் போத்ராவிடம் கடந்த 2002ம் ஆண்டு ரூ.35 லட்சம் கடன் வாங்கினர். இதற்காக காசோலையும் கொடுத்தனர்.
 
ஆனால், அந்த காசோலை, வங்கிக் கணக்கில் பணம் இல்லை என்று திரும்பி வந்ததால், அன்பரசு, அவரது மனைவி கமலா, மணி மற்றும் ராஜீவ்காந்தி அறக்கட்டளையின் பெயரில் சென்னை ஜார்ஜ் டவுன் கோர்ட்டில் போத்ரா வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு, ‘அன்பரசு உள்ளிட்டோருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து அன்பரசு உள்ளிட்டோர் மேல்முறையீடு செய்தனர்.



இந்த மேல்முறையீட்டு வழக்கு சென்னை 4வது கூடுதல் செசன்சு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. விசாரணையின்போது, கமலா அன்பரசு இறந்து விட்டார்.

இதற்கிடையே, வழக்கை விசாரித்த நீதிபதி என்.சாந்தி, அன்பரசு உள்ளிட்டோருக்கு எதிரான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. அதனால் இந்த மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்கிறேன். கீழ் கோர்ட்டு வழங்கிய சிறை தண்டனையை உறுதி செய்கிறேன். எனவே, அன்பரசு, மணி ஆகியோரை சிறையில் அடைப்பதற்கான பிடிவாரண்ட்டை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு உடனடியாக பிறப்பிக்க வேண்டும் என தீர்ப்பளித்தார்.

இந்நிலையில், காசோலை மோசடி வழக்கில் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. அன்பரசுவுக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை உறுதி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். தண்டனையை உடனே அமலபடுத்த வேண்டும் என உத்தரவிட்ட நீதிமன்றம், இதுதொடர்பாக அன்பரசு, மணி ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
Tags:    

Similar News