செய்திகள்

பாராளுமன்ற தேர்தல் - திருப்பூரில் கட்சி கொடிகள் தயாரிக்கும் பணி தீவிரம்

Published On 2019-03-02 10:16 GMT   |   Update On 2019-03-02 10:16 GMT
பாராளுமன்ற தேர்தலுக்காக அரசியல் கட்சிகளுக்கான கொடிகள், தொப்பிகள் தயாரிக்கும் பணி திருப்பூரில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
திருப்பூர்:

பாராளுமன்றத்துக்கு மே மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் தற்போதே அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது. கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையில் பல்வேறு கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

தமிழகத்தில் அ.தி.மு.க., தி.மு.க. தலைமையில் மாபெரும் கூட்டணி உருவாகி உள்ளது. அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா, பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்று உள்ளது. தே.மு.தி.க.வும் இக்கூட்டணியில் இடம் பெற உள்ளது.

தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டுகள், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்கிகள் இடம் பெற்றுள்ளது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் தங்களது வேட்பாளர்களை அறிவித்து அரசியல் கட்சிகள் பிரசாரத்தை தீவிரப்படுத்த உள்ளது. இதற்காக தங்களது கட்சி வேட்பாளர்கள் பெயரை எழுத சுவர்களில் இடம் பிடிக்க போட்டா போட்டி நடைபெற்று வருகிறது.

மேலும் கட்சி சின்னம், கொடி, பேனர் உள்ளிட்டவைகளையும் அச்சடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

திருப்பூரில் பின்னலாடை வர்த்தகம் பண்டிகை மற்றும் சீசன் காலங்களுக்கு ஏற்ற வகையில் நடந்து வருகிறது. இதற்கேற்றபடி தொழில்துறையினர் தங்களுக்கு கிடைக்கிற ஆர்டர்களின் படி ஆடைகளை தயாரித்து வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதுபோல் குறுகிய கால சீசன்களான ஐ.பி.எல். கிரிக்கெட், கால்பந்து போட்டி போன்றவற்றிற்கான ஆடைகளையும் தயாரிப்பது வழக்கம்.

இந்நிலையில் பாராளுமன்ற தேர்தலுக்காக அரசியல் கட்சிகளுக்கான கொடிகள், தொப்பிகள் தயாரிக்கும் பணியும் திருப்பூரின் பல்வேறு பகுதிகளில் நடந்து கொண்டிருக்கிறது. தற்போது இதற்கான ஆர்டர்களும் அதிகரித்துள்ளதால் தொழில்துறையினர் உற்சாகமடைந்துள்ளனர்.

இதுகுறித்து தொழில்துறையினர் கூறியதாவது:-

பாராளுமன்றத் தேர்தல் வர உள்ளது. இதனால் திருப்பூர் தொழில்துறையினருக்கு அரசியல் கட்சிகளின் சின்னங்கள், தலைவர்களின் உருவப்படங்கள் பொறிக்கப்பட்ட டி-சர்ட்கள் மற்றும் அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரத்தில் அதிகமாக பேசும் வாசகங்கள் மற்றும் கட்சி கொடிகள், தொப்பிகள் போன்றவற்றிற்கான ஆர்டர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து கொண்டிருக்கிறது.

ஆர்டர்களின் பேரில் அனைத்தையும் தயாரித்து அனுப்பி கொண்டிருக்கிறோம். அ.தி.மு.க., தி.மு.க. பா.ஜனதா, கம்யூனிஸ்டு, காங்கிரஸ், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட கட்சியினரிடம் இருந்து ஆர்டர்கள் அதிகளவு வந்துள்ளது. ஸ்கீரின் பிரிண்டிங் முறையில் இதனை தயாரித்து வருகிறோம்.

கடந்த ஜனவரி மாதத்தில் இருந்தே ஆர்டர்கள் வர தொடங்கியது. ஆயிரம் கொடிகள் முதல் 10 ஆயிரம் கொடிகள் வரை ஒவ்வொரு கட்சியினரும் ஆர்டர்கள் கொடுத்துள்ளனர். இன்னும் தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் இன்னும் ஆர்டர்கள் அதிகரிக்கும் என எதிர்பார்த்துள்ளோம்.

தற்போது ஆர்டர்கள் அதிகளவு குவிந்துள்ளதால் இரவு-பகலாக வேலை செய்து வருகிறோம். ஆர்டர்கள் அதிகமாக வருவதால் உற்சாகத்தில் உள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Tags:    

Similar News