செய்திகள்

தென்காசி அருகே விளைநிலங்களுக்குள் புகுந்த காட்டு யானைகள் விரட்டப்பட்டன

Published On 2019-02-13 07:34 GMT   |   Update On 2019-02-13 07:34 GMT
தென்காசி அருகே விளைநிலங்களுக்குள் புகுந்த காட்டு யானைகள் விரட்டப்பட்டதால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தென்காசி:

தென்காசி அருகே மேற்கு தொடர்ச்சி மலையடி வாரத்தில் இருந்து சற்று தொலைவில் உள்ள கிராமம் மத்தளம்பாறை. இந்த பகுதியில் ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளன. இப்பகுதியில் கடந்த வாரம் காட்டு யானைகள் புகுந்தன. அவை அங்கு பயிரிட்டிருந்த தென்னை, நெற்பயிர்களை சேதப்படுத்தின.

இந்நிலையில் நேற்று முன்தினமும் இரவு அதே பகுதியில் காட்டு யானைகள் கூட்டமாக புகுந்தன. அவை மத்தளம்பாறையை சேர்ந்த அருணாச்சலம், சேதுராமன், பொன்னையா, இசக்கி, வேலாயுதம் ஆகியோருக்கு சொந்தமான வயல்களில் பயிரிடப்பட்டிருந்த நெற் பயிர்களையும், தென்னை, வாழை மரங்களையும் சேதப்படுத்திவிட்டு காட்டுக்குள் சென்று விட்டன.

இதில் 132 தென்னை மரங்களும், 8 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள், 3 ஏக்கரில் பயிரிட்டிருந்த நெற்பயிர்கள் சேத மடைந்தன. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த குற்றாலம் வனவர் பாண்டியராஜ், வனக்காவலர் வனராஜ், வேட்டை தடுப்பு காவலர்கள் மாடசாமி, ராஜு, சிவா ஆகியோர் சேத மடைந்த பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பின்னர் வனத்துறை ஊழியர்கள் இரவில் பொதுமக்கள் உதவியோடு யானைகளை காட்டுக்குள் விரட்டினர். இது தொடர்பாக குற்றாலம் வனத்துறை ரேஞ்சர் ஆரோக்கியசாமி கூறியதாவது:-

மத்தளம்பாறை பகுதிக்குள் புகுந்த காட்டு யானைகள் விரட்டப்பட்டு விட்டன. இந்த யானைகள் களக்காடு பகுதியில் இருந்து வந்துள்ளன. தொடர்ந்து யானைகள் ஊருக்குள் வராமல் தடுக்க நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டு வருகிறது. தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News