செய்திகள்

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்குச்சாவடி மையங்களை கலெக்டர் ஆய்வு

Published On 2019-02-03 16:57 GMT   |   Update On 2019-02-03 18:06 GMT
பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்குச்சாவடி மையங்களை கலெக்டர் சுப்பிரமணியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
விழுப்புரம்:

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு முன்னேற்பாடு பணிகள் அந்தந்த பகுதி தேர்தல் அலுவலர்களின் மேற்பார்வையில் நடைபெற்று வருகிறது.

அதன் தொடர்ச்சியாக விழுப்புரம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களான விழுப்புரம் பூந்தோட்டத்தில் உள்ள நகராட்சி உயர்நிலைப்பள்ளி, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, காமராஜர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஏழுமலை பாலிடெக்னிக் கல்லூரி, தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி, வழுதரெட்டி அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளி, கே.கே.நகர் செயின்ட் பால்ஸ் மழலையர் தொடக்கப்பள்ளி, ராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளி ஆகிய வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் தேர்தல் பராமரிப்பு பணிகள் குறித்து நேற்று மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது வாக்குச்சாவடி மையங்களில் அடிப்படை வசதிகளான மின்வசதி, குடிநீர் வசதி மற்றும் வாக்குச்சாவடி முகவர்களுக்காக அமைக்கப்பட்டு வரும் இருக்கை வசதிகள், பாதுகாப்பு தடுப்புக்கட்டைகள், நாற்காலிகள், சாய்தளங்கள் போன்ற முன்னேற்பாடு பணிகளை பார்வையிட்டார்.

இந்த ஆய்வின்போது கோட்டாட்சியர் குமாரவேல், நகராட்சி ஆணையர் லட்சுமி, தாசில்தார் சையத்மெகமூத், வருவாய் ஆய்வாளர் வெங்கடபதி ஆகியோர் உடனிருந்தனர்.
Tags:    

Similar News